பஞ்சாயத்து முடிந்தது – ஐசரிகணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் பட விவரம்

ஐசரிகணேசின் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார் சிம்பு.அப்படம் 2022 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது.
அப்பட வெளியீட்டுக்கு முன்பாகவே அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் சிம்பு நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதியன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்றும் இப்படம் எஸ்டிஆர் 48 என்றும் சொல்லப்பட்டிருந்தது.
அதோடு அந்தப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரிகணேஷ் தயாரிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து வேறு எதுவும் நடக்கவில்லை.
அதன்பின் சிம்புவின் 48 ஆவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தேசிங்கு பெரியசாமி இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், எங்களிடம் ஒப்புக்கொண்டபடி எங்கள் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்துவிட்டுத்தான் சிம்பு வேறுபடங்களில் நடிக்கப் போகவேண்டும் என்று ஐசரிகணேஷ் புகார் கொடுத்தார்.
அதன்பின் அதுபற்றி அவரிடமே கேட்டபோது, சிம்புவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் விரைவில் எல்லாம் சுமுகமாகிவிடும் என்று சொன்னார்.
இப்போது சுமுகநிலை எட்டப்பட்டு வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிப்பது உறுதியாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.
2023 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 2018.அந்தப்படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அவர் சொன்ன கதை சிம்புவுக்குப் பிடித்ததால் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் அந்தப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கட்டும் என்று சிம்பு சொன்னதை இயக்குநரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தில் இன்னொரு சுவாரசியமும் இருக்கிறதாம்.இந்தக் கதையில் கதாநாயகனுக்கு இணையான இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறதெனவும் அந்தக் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ஐசரிகணேஷுக்கும் இதில் சம்மதம்.அதே சமயம் சிம்பு சம்பளம் தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றனவாம்.அதில் ஒத்த கருத்து எட்டப்பட்டுவிடும் என்றும் சொல்கிறார்கள்.
பேச்சுவார்த்தை நிறைவடைந்தவுடன் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.