சினிமா செய்திகள்

மொத்தமாக 36 கோடி கொடுத்த தனுஷ்? – நடந்தது என்ன?

2024 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி, தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதில், அந்தப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்றும் பிரபல திரைப்பட நிதியாளர் அன்புச் செழியன் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

அப்போதிருந்து அந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில்,இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் படத்தின் மொத்தச் செலவு குறித்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இருவரும் தத்தம் நிலையில் பிடிவாதமாக இருந்தனர்.நாயகன் தனுஷ் சமரசம் செய்தும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால், இந்தப் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அன்புச்செழியன் சொல்லிவிட்டார்.அதோடு இந்தப் படத்துக்காகப் போடப்பட்ட அலுவலகத்தையும் பூட்டிவிட்டார்.

அதன்பின், இந்தப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்க ஒருசில தயாரிப்பு நிறுவனங்களை அணுகியிருக்கிறார்கள்.யாரும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதன்காரணமாக, தாமே அந்தப்படத்தைத் தயாரிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார் தனுஷ்.

அவருடைய வுண்டர்பார் நிறுவனம் சார்பாக அப்படம் உருவாகவுள்ளது. இதற்காக போயஸ்கார்டன் அருகில் அலுவலகம் அமைக்கப்பட்டு வேலைகள் தொடங்கிவிட்டன என்கிறார்கள்.

இப்படத்தைத் தொடங்கி அதற்காகப் பலகோடி செலவு செய்திருந்தார் அன்புச் செழியன்.அந்தப் பணத்தை முழுமையாக அவரிடம் கொடுத்து அவரிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்றுவிட்டாராம் தனுஷ்.

இதுகுறித்து திரையுலக வட்டாரங்களில் உலவும் தகவல் என்னவெனில்?

தயாரிப்பாளர் அன்புச்செழியனுக்கு தனுஷ் 26 கோடி பணம் தரவேண்டியிருந்தது.அதற்காகத்தான் இந்தப்படமே தொடங்கப்பட்டது.

படத்துக்கான சம்பளமாக அந்தத் தொகை மாற்றிக் கொள்ளப்பட்டுவிட்டது.திடீரென படம் தயாரிப்பிலிருந்து அன்புச் செழியன் விலகிக் கொண்டதால் அந்தப்பணத்தைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் தனுஷுக்கு ஏற்பட்டது.

அந்தப்பணம் 26 கோடி மற்றும் இந்தப்படத்துக்கான முன் தயாரிப்புச் செலவு சுமார் பத்துகோடி ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தம் 36 கோடி ரூபாய் ஆகிவிட்டது.இது தவிர வட்டிக் கணக்கு தனி.

இப்போது, அந்த 36 கோடி பணத்தை மொத்தமாக அன்புச் செழியனுக்கு தனுஷ் கொடுத்துவிட்டார்.அதனால் அன்புச்செழியன், இப்படத்தைத் தயாரிக்கும் உரிமையை வுண்டர்பார் நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார்.

இந்தத் தகவல்தான் இப்போது பரபரப்பாகத் திரையுலகில் உலவிக் கொண்டிருக்கிறது.

தனுஷ் மொத்தமாக இவ்வளவு தொகையை எப்படிக் கொடுத்தார் என்று விசாரித்தால்? மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்து மொத்தத் தொகையைக் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. வுண்டர்பார் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் இப்படத்தைத் தயாரிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Related Posts