சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு தமிழ்க்குமரன் போட்டி – விவரம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும்.

கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது.

அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக இராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் ஆகியோர். பொருளாளராக சந்திரபிரகாஷ்ஜெயின் போட்டியிட்டனர். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணைச்செயலாளர் பதவிக்கு சவுந்தர் போட்டியிட்டார்.

இன்னொரு பக்கம்,அப்போது செயலாளராக இருந்த மன்னன் தலைமையில் ஓர் அணி உருவானது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு மன்னனும் செயலாளர்களாக கமீலாநாசர் மற்றும் தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். துணைத்தலைவர்களாக மைக்கேல்ராயப்பன், விடியல்ராஜு ஆகியோர் போட்டியிட்டனர்.

அந்த அணியில் பொருளாளராக லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் போட்டியிட்டார்.இணைச்செயலாளர் பதவிக்கு சி.மணிகண்டன் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் தேனாண்டாள் முரளி அணி வெற்றி பெற்றது.

இப்போது அதன் பதவிக்காலம் 2026 மார்ச் உடன் நிறைவடையவிருக்கிறது.

இந்நிலையில் அந்தச் சங்கத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.

இதனால், தேர்தலில் போட்டியிட இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி, இம்முறை போட்டியிடவில்லையாம். அவருக்குப் பதிலாக அந்த அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று செயலாளராக இருக்கும் இராதாகிருஷ்ணன், இப்போது தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடவிருக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது.

இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இராதாகிருஷ்ணன் மீண்டும் செயலாளர் பதவிக்கே போட்டியிடுகிறார்.இன்னொரு செயலாளர் பொறுப்புக்கு கமீலா நாசர் போட்டியிடுகிறார்.

தலைவர் பொறுப்புக்கு இப்போது துணைத்தலைவராக இருப்பவரும், லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் தனியாகத் தயாரிப்பு நிறுவனமும் வைத்திருப்பவருமான ஜிகேஎம்.தமிழ்க்குமரன் போட்டியிடுகிறார்.

இன்னொரு பக்கம், இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் போஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.அவருடைய அணியில் துணைத்தலைவர் பதவிக்கு சேவியர் பிரிட்டோ மற்றும் மதியழகன் ஆகியோரும் செயலாளர் பதவிக்கு செளந்தரபாண்டியனும் பொருளாளர் பதவிக்கு மன்னனும் போட்டியிடவிருக்கிறார்கள்.

Related Posts