விமர்சனம்

காந்தாரா அத்தியாயம் 1 – விமர்சனம்

2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருந்தது.

அதற்கு முந்தைய காலகட்டத்தைக் கதைக் களமாக கொண்டு வெளியாகியிருக்கிறது காந்தாரா அத்தியாயம் 1.

மூலிகைகள் மற்றும் விலையுர்ந்த விளைபொருட்கள் விளையும் காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற அதன் அருகே இருக்கும் நாட்டின் அரசர் முயல்கிறார். அதில் அவர் தோல்வியடைந்தாலும் அவரது அடுத்த தலைமுறையினர் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு இறக்கிறார்கள்.

இந்நிலையில், காந்தாரா பழங்குடி இனத்தைச் சேர்ந்த நாயகன் ரிஷப் ஷெட்டி, காட்டை விட்டு வெளியேறி தங்களிடம் உள்ள விளைபொருட்களை விற்பனைக் கொண்டு செல்கிறார்.அதோடு சாதாரண மக்கள் மீது போடப்பட்டிருந்த தடைகளைத் தகர்த்து, துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்.

ரிஷப் ஷெட்டி மற்றும் அவருடைய மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசர் ஜெயராம் அடுத்துக் கெடுக்க நினைக்கிறார். அவர்களுடன் சமரசமாக பேசுகிறார். அவர்களுக்கான அனைத்து மரியாதையையும் வழங்குவதாக அறிவிக்கிறார். அவர்களின் சக்திகளைக் கட்டுப்படுத்தி காந்தாராவைக் கைப்பற்ற சதி செய்கிறார்.அவரது எண்ணம் ஈடேறியதா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

முந்தைய படத்தைப் போல் இந்தப்படத்திலும் ரிஷப் ரெட்டி நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.இயல்பான காட்சிகளைக் காட்டிலும் சாமி வரும் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.

நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், நாயகனுக்கு இணையாக நடிப்பில் சிறந்திருக்கிறார்.அமைதியாகவும் ஆக்ரோசமாகவும் தோன்றி திகைக்க வைக்கிறார்.

மன்னராக நடித்திருக்கும் ஜெயராம் மற்றும் அவர் மகனாக நடித்திருக்கும் குல்சன் தேவய்யா ஆகியோர் வேடத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பி.அஜனீஸ் லோக்நாத் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசைதான் படத்தை உயிர்ப்பித்தாக வேண்டும் என்பதை உணர்ந்து இசைத்திருக்கிறார்.

அரவிந்த் கே.காஷ்யப் ஒளிப்பதிவும் கணினி வரைகலைக் காட்சிகளும் படத்தைப் பெரிதாகக் காட்டுகின்றன.

படத்தொகுப்பாளர் சுரேஷ், படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

நாயகன் ரிஷப் ஷெட்டியே எழுதி இயக்கியிருக்கிறார்.முந்தைய காந்தாராவின் எதிர்பார்ப்போடு வரும் இரசிகர்களை திருப்திப் படுத்தத் தவறியிருக்கிறார்.இந்தப் படம் மட்டும் பார்ப்பவர்கள் நிறைவாகச் செல்ல வைத்திருக்கிறார்.

– இளையவன்

Related Posts