சினிமா செய்திகள்

ரஜினி விஷால் சந்திப்பில் நடந்தது என்ன?

தமிழகம் முழுவதும் மார்ச் 1,2018 ஆம் தேதி புதிய படங்கள் திரையிடுவது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்புகளும் கடந்த 16-ம் தேதி நிறுத்தப்பட்டது. சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இந்த முடிவை விமர்சித்து நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேட்டி கொடுத்தார்.

அதனால், தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ரஜினியைச் சந்தித்து விளக்கமளித்துள்ளனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,

திரைத்துறையில் தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்தும், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் தயாரிப்பாளர்கள் எந்த வகையில் பயன்பெற முடியும் என்பதையும் ரஜினியிடம் விரிவாக எடுத்துக் கூறினோம். அவரும் முழுமையாகக் கேட்டார்.

எது செய்தாலும் திரைப்படத் துறையை நம்பி வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுங்கள். பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று ரஜினி கூறினார். அனைத்து பிரச்சினைகளுக்கும் இன்னும் சில நாட்களில் தீர்வு காணப்படும் என்று அவரிடம் தெரிவித்தோம் என்று விஷால் கூறினார்.

ஒட்டுமொத்த திரைத்துறையும் ஒருங்கிணைந்து ஒரு போராட்டத்தில் இறங்கியிருக்கும் போது அதற்கு எதிராகப் பொதுவெளியில் கருத்து சொன்ன ரஜினியிடம் ஏன் அப்படிச் சொன்னீர்கள்? என்று விளக்கம் கேட்க வேண்டிய அமைப்பு ஏன் போராட்டம் நடத்துகிறோம் என்று விளக்கம் சொல்லிவிட்டு வந்திருக்கிறது. இது சரியல்ல என்று பலரும் கருத்து சொல்கிறார்கள்.

Related Posts