அக்டோபரில் வெளியாகும் படத்துக்கு இப்போது பெயர் அறிவிப்பு ஏன்? – ஜனநாயகன் சர்ச்சை
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.
நேற்று, குடியரசு தினத்தினை முன்னிட்டு இப்படத்தின் பெயரோடு முதல்பார்வை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். தீவிர அரசியலில் ஈடுபடும் முன்பு, விஜய் நடிக்கும் கடைசி படம் என்று சொல்லப்படுவதால் ‘ஜன நாயகன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
இப்படம் தொடங்கும்போதே இப்படத்தின் வெளியீடு இவ்வாண்டு அக்டோபர் என்று சொல்லிவிட்டார்கள்.
அக்டோபர் 1 ஆம் தேதி ஆயுதபூசையையொட்டி இப்படம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது.
பொதுவாக விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படப்பெயர் அறிவிப்பை முதலிலேயே வெளியிட்டுவிடுவார்கள் அல்லது வெளியீட்டுக்கு சில வாரங்கள் முன்னதாக அறிவிப்பார்கள்.
ஆனால் இந்தப்படத்துக்கு சனவரி மாதமே அதாவது எட்டு மாதங்கள் முன்பே பெயரும் முதல்பார்வையும் வெளியிடப்பட்டது ஏன்?
நேற்று முன் தினம் நடிகர் அஜீத்குமாருக்கு பத்மபூசன் விருது அறிவிக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
சமூகவலைதளக் காலமான இந்தக் காலத்தில் அதில் இவ்விரு நடிகர்களும் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர்.ஒருவருக்கொருவர் எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் குறித்து முக்கிய அறிவிப்பு வருகிற நேரத்தில் அதற்குப் போட்டியாக அஜீத் தரப்பிலிருந்து ஏதாவதொரு அறிவிப்பு வெளியிடப்படும்.சமூக வலைதளங்களில் இரண்டுமே நிறைந்து காணப்படும்.அதேபோலத்தான் அஜீத் குறித்த செய்திகள் வெளியாகும் நேரத்தில் அது மட்டுமே பேசுபொருளாக இல்லாத வகையில் விஜய் தரப்பிலிருந்து ஏதாவது வந்துவிடும்.
கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்தப் போட்டி மனப்பான்மையின் வெளிப்பாடாகவே அஜீத்துக்கு ஓர் உயரிய விருது கிடைத்திருக்கும் போது அது மட்டுமே டிரென்ட் எனப்படும் பேசுபொருளாக இருந்துவிடக் கூடாது என்று விஜய் நினைத்ததன் விளைவே ஜனநாயகன் பெயர் அறிவிப்பு என்று சொல்லப்படுகிறது.
சிறிதும் ஆரோக்கியமற்ற இந்தப்போக்கு தொடர்வது வேதனை.









