சினிமா செய்திகள்

கதாநாயகனாக நடிக்கிறார் தயாரிப்பாளர் கேஜேஆர் – விவரம்

நயன்தாரா நடித்த அறம்,ஐரா பிரபுதேவா நடித்த குலேபகாவலி,விஜய்சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம்,சந்தானம் நடித்த டிக்கிலோனா,பார்வதி நாயர் நடித்த ஆலம்பனா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ,டாக்டர்,அயலான் ஆகிய படங்களைத் தயாரித்தவர் கே.ஜே.ஆர் என்று சொல்லப்படும் கொட்டப்பாடி ஜே ராஜேஷ்.

அயலான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

அதன்பின் அவர் தயாரிப்பில் உருவான ரூபம் என்கிற படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.இதுவரை அப்படம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

வேறு புதிய படம் தயாரிப்பில் இருக்கிறதா? என்றாலும் இல்லை.

அப்புறம் அவர் என்னதான் செய்கிறார்?

அவர் எவ்வித அறிவிப்போ விளம்பரமோ இல்லாமல் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

அப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

இப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் எனும் திரைப்பட நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிறுவனமும் கேஜேஆருடையதுதான் என்று சொல்லப்படுகிறது.

கேஜேஆர் ஸ்டுடியோஸ் இருக்கும்போது இன்னொரு நிறுவனம் எதற்கு?

அந்நிறுவனத்தின் பெயரில் படம் தயாரித்தால் நிறைய பஞ்சாயத்துகள் வந்துவிடும் எனபதால் புதிய நிறுவனம் அதுவும் வேறொருவர் பெயரில் தொடங்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஜேபி என்பவர்,கே ஜே ஆர் நிறுவனத்தில் படம் இயக்கும் வாய்ப்புக்காகச் சென்றிருக்கிறார்.அவர் சொன்ன கதை பிடித்திருந்ததால் அவரை வைத்துப் படம் தயாரிப்பதாகச் சொல்லியிருந்தாராம் கே.ஜே.ஆர்.

அயலான், ரூபம் ஆகிய படங்களின் வெளியீட்டுக்குப் பின்னர் ஜேபி இயக்கும் படத்தைத் தொடங்குவதாகத் திட்டமிட்டிருந்தார்களாம்.
அதற்காக வளர்ந்து வரும் ஒரு கதாநாயகனிடம் பேசி வைத்திருந்திருந்திருக்கிறார்கள்.

அயலான் வெளியீட்டுக்குப் பிறகு உடனடியாகத் தொடங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள்.

திடீரென இந்தப்படத்தில் நானே கதாநாயகனாக நடிக்கிறேன்,என்னையே வைத்து இயக்குங்கள் என்று இயக்குநர் ஜேபியிடம் சொல்லியிருக்கிறார் கே.ஜே.ஆர்.

இதைச் சற்றும் எதிர்பார்த்திராத ஜேபி தடுமாறிப்போனாராம்.ஆனாலும் வேறு வழியில்லை கிடைத்த வாய்ப்பை விட்டுவிட வேண்டாம் என முடிவு செய்து அவரையே நாயகனாக்கி படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டாராம்.

நயன்தாராவின் மேலாளராக தமிழ்த் திரையுலகம் அறிந்திருந்த கே.ஜே.ஆர், நயன்தாரா சம்மதத்தில் தயாரிப்பாளர் ஆனார்.அவர் தயாரித்த முதல் படமான அறம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலிலும் போட்டியிட்டார்.

அவர் தயாரிப்பில் வெளியான சில படங்கள் பெரிய வெற்றி பெற்றாலும் சில படங்கள் தோல்வியைத் தழுவின.இதனால் பொருளாதார ரீதியாகக் கடும் நெருக்கடிக்கு ஆளானார் என்று சொல்லப்பட்டது.

அதனால்தான் நடிகர்களுக்குக் கோடி கோடியாகச் சம்பளம் கொடுத்துவிட்டு நாம் கஷ்டப்படுவதைக் காட்டிலும் நாமே நடிகராகிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார் போலும்.

தயாரிப்பாளராக பொருளாதார நெருக்கடிக்கு ஆளான அவர் கதாநாயகனாக வெற்றி பெற்று கடனை எல்லாம் அடைத்து சுதந்திரமாக உலா வந்தால் நல்லதுதான்.

Related Posts