விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயரைக் கேட்கும்போதே இப்படித்தான் இருக்கும் என்கிற எண்ணம் வரும்.அதற்கேற்ப சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாலியோ ஜிம்கானா.

அபிராமிக்கு மூன்று மகள்கள்.நான்கு பெண்கள் கொண்ட இந்தக் குடும்பத்துக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூலம் சிக்கல்.அதற்காக வழக்குரைஞர் பிரபுதேவாவைச் சந்திக்கப் போனால் அங்கு அதற்குமேல் ஒரு பெரும் சிக்கல்.அது என்ன? அதன் முடிவென்ன? என்பதுதான் படம்.

நடனப்புயல் பிரபுதேவா இப்படி ஒரு வேடமேற்று நடித்திருப்பதே வியப்புதான்.ஆம் படமெங்கும் பிணமாக நடித்திருக்கிறார்.அதற்காகப் படுத்தே கிடப்பார் என்று நினைத்துவிடாதீர்கள்.ஆட்டம் பாட்டம் மற்றும் பிரபுதேவாவின் வழக்கமான சில்மிஷங்கள் ஆகிய அனைத்தும் இருக்கின்றன.எப்படி என்பதைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாயகியாக மடோனா செபாஸ்டின்,யாஷிகா ஆனந்த்,அபிராமி, அபிராமி பார்கவன் ஆகியோர் படம் கலகலப்பாக நகர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டிருக்கிறார்கள்.

யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ், சாய் தினா, ரோபோ சங்கர், கதிர், ஜான் விஜய், கல்லூரி வினோத், ஒய்.ஜி.மகேந்திரன், சாம்ஸ் ஆகியோருடன் இயக்குநர் சக்தி சிதம்பரமும், படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான ஜெகன் கவிராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

அஷ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் இரசிக்கும் இரகம்.ஜெகன்கவிராஜ் எழுத்தில் வந்திருக்கும் போலீஸ்காரனை கட்டிகிட்டா பாடல் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் எம்.சி.கணேஷ் பாபு,படத்தின் கதைக்களம் நகைச்சுவைதான் என்பதை உணர்ந்து அதற்கேற்பக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

பிரபுதேவாவைப் பிணமாக நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணியதற்காகவே இயக்குநர் சக்திசிதம்பரத்தைப் பாராட்டலாம்.திரைக்கதையிலும் அந்த சுவாரசியத்தைக் கொண்டுவரப் பாடுபட்டிருக்கிறார்.

– இளையவன்

Related Posts