சினிமா செய்திகள்

பிவிஆர் நிறுவனத்தின் அட்டூழியம் – விநியோகஸ்தர்கள் போர்க்குரல்

தமிழ்நாட்டில் தனித் திரையரங்குகள் ஒவ்வொன்றாகக் குறைந்து பல்திரை அரங்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.இன்னும் கொஞ்ச காலத்தில் தனித் திரையரங்குகளே இல்லை எனும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள்.

பல்திரை அரங்குகளை இந்தியா முழுவதும் நிறுவி இந்தியத் திரையுலகில் கோலோச்சும் நிறுவனமாக பிவிஆர் நிறுவனம் திகழ்கிறது.

பிவிஆர் நிறுவனத்துக்கு சென்னையில் மட்டும் 105 திரைகளும் தமிழ்நாடு முழுக்க சுமார் 150 திரைகளும் இருக்கின்றன.சென்னை,செங்கல்பட்டு, கோவை,மதுரை,சேலம் ஆகிய விநியோகப் பகுதிகளில் இந்நிறுவனத்தின் திரையரங்குகள் இருக்கின்றன.

சென்னையின் அடையாளமாகத் திகழ்ந்த சத்யம் சினிமாஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை விழுங்கிச் செரித்து வளர்ந்து கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.

அந்நிறுவனம் வளர்வதை மகிழ்ச்சியோடு வரவேற்ற திரையுலகம் இப்போது அந்நிறுவனத்துக்கெதிராகப் போர்க்குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறது.

அதற்குக் காரணம், அந்நிறுவனம் திரையிடும் படங்களில் கிடைக்கக்கூடிய வருவாயை விநியோகஸ்தர்களுக்குக் கொடுப்பதில் பெரும் காலதாமதம் செய்கிறதாம்.

நீங்கள்,இன்றைக்கு பிவிஆர் திரையரங்கில் ஒரு படம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு உடனே பணம் செலுத்தித்தான் நுழ்ழைவுச் சீட்டைப் பெற முடியும்.

நீங்கள் இன்று கொடுக்கும் அந்தப் பணத்தில் விநியோகஸ்தர்களுக்கான பங்குத் தொகையை அவர்களிடம் கொடுக்க சுமார் மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்கிறதாம் அந்நிறுவனம்.

நீங்கள் தங்கலான் படம் பார்க்கிறீர்கள் என்றால் அதற்காகச் செலுத்திய தொகையைக் கொடுக்க அவர்கள் நேரம் எடுத்துக் கொள்ள கையாளும் வழிமுறைகளைக் கேட்டால் வியப்பாக இருக்கிறது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அந்தப்படம் சுமார் ஒரு மாதம் அல்லது ஐம்பதுநாட்கள் திரையரங்கில் ஓடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.அப்படம் ஓடி முடித்த பின்பு மொத்தமாக எவ்வளவு வசூல் அதில் விநியோகஸ்தரின் பங்கு எவ்வளவு என்பதைப் பிரித்து எழுதிக் கணக்குப் போட்டு அதை விநியோகஸ்தரிடம் கொடுத்துவிடுவார்களாம்.

கணக்குக் கொடுத்த பின்பு சுமார் இரண்டு வாரம் கழித்துப் பணம் கொடுப்பது என்று தொடங்கி படிப்படியாக அந்தக் கால எல்லையை நீட்டித்து இப்போது சுமார் மூன்று மாதங்கள் ஆக்கிவிடுகிறார்களாம்.

அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி நீங்கள் கொடுத்த பணத்தில் விநியோகஸ்தரின் பங்கு அவரிடம் சென்று சேர சுமார் ஐந்து மாதங்கள் ஆகின்றன என்கிறார்கள்.

அதேசமயம் தனித் திரையரங்கு முதலாளிகள் படம் போடுவதற்கு முன்பணம் கொடுக்கிறார்கள்.ப்டம் ஓடி முடிந்ததும் உடனே கணக்குக் கொடுத்துப் பணமும் கொடுத்து விடுகிறார்களாம்.

ஆனால் பிவிஆர் போன்ற பெருநிறுவனம்,எந்தப் படத்துக்கும் முன்பணம் கொடுப்பதில்லை.வருகிற வசூலையும் சுமார் ஐந்து மாத காலம் அவ்வளவு பணத்தையும் பயன்படுத்திக் கொள்கிறது. வட்டிக்கு வாங்கி தொழில் செய்யும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளரும் இந்த ஐந்து மாதத்துக்கும் சேர்த்து வட்டி கட்டி வீணாய்ப் போகிறார்.

ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னையில் நடந்த நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கப் பொதுக்குழுவில் பிவிஆர் நிறுவனத்தின் இச்செயலுக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன.

அப்போது அந்நிறுவனத்தின் நிர்வாகிகளோடு இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

தனித் திரையரங்குகளை அழித்து உருவாகும் இதுபோன்ற நிறுவனங்களின் பளபளப்பைப் பார்த்து அவர்களை ஆதரிப்பதை திரைப்பட இரசிகர்களும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

Related Posts