சினிமா செய்திகள்

தேனாண்டாள் முரளி தயாரிப்பில் படம் நடிக்க ஒப்புக்கொண்ட தனுஷ் – விவரம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டுக்கூட்டம் சென்னையில் ஜூலை மாதம் 26 ஆம் தேதி நடந்தது.

அப்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றில்…

இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல படங்கள், சரியான திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கின்றன. அந்த நிலையை மாற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகளைத் தொடங்கலாம் என்பதால், வரும் 16.8.2024 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் படங்களைப் பற்றிய விவரங்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.

அந்தப் படப்பிடிப்புகளை வரும் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதால், தமிழ்த் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, வரும் 1.11.2024 முதல் தமிழ்த் திரையுலகின் அனைத்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படும். திரைத்துறை சம்பந்தமாக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தனுஷ் உள்ளிட்ட சில முன்னணி நாயகர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி தயாரிப்பில் தனுஷ் ஒரு படம் செய்வதாக ஒப்புக்கொண்டு அதில் பின்வாங்கியதால் பல கோடி நட்டம் ஏற்பட்டதென்றும் அதைச் சரிகட்ட ஒரு படம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டபோது தனுஷ் நிராகரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் அறிவித்தபடி வேலை நிறுத்தம் தொடங்கிவிடுமோ? என்கிற அச்சத்துடனே திரைப்படத்துறையினர் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நடந்திருக்கிறது.அதில், நாசர்,விஷால்,கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனராம். அந்தக் கூட்டத்தில், தேனாண்டாள் முரளி தனுஷ் ஆகியோர் மோதல் குறித்துப் பேசப்பட்டதாம்.அப்போது தேனாண்டாள் முரளி தயாரிப்பில் ஒரு படம் செய்ய தனுஷ் ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.ஏற்கெனவே சொன்ன கதை வேண்டாம் ஒரு புதுக்கதையை வைத்து படம் எடுத்துக் கொடுக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறாராம்.

பெரிய சிக்கல் ஒன்று சுமுக முடிவுக்கு வந்திருக்கிறது. அதோடு மற்ற சிக்கல்களையும் ஒவ்வொன்றாகப் பேசி சரி செய்துகொள்ளலாம் என்கிற உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், திரைப்படத்துறையினர் பயந்து கொண்டிருந்தது போல் தமிழ்த் திரைப்படத்துறையில் வேலை நிறுத்தம் வராது.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமென்று சொல்கிறார்கள்.

நல்லது நடக்கட்டும்.

Related Posts