சினிமா செய்திகள்

முதல் படமே முழு வெற்றி – படநிறுவனம் மகிழ்ச்சி

கோவையிலிருந்து சென்று அமெரிக்காவில் தொழிலதிபராக இருப்பவர் பாபிபாலச்சந்திரன். உலகளவில் பல முன்னணி கம்பெனிகளில் டேட்டா ரிஸ்க் இருக்கிறது, அந்த டேட்டாக்களைப் பாதுக்காக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர்.300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது அந்நிறுவனம்.

அவர் தமிழ்த் திரைப்படத்துறைக்குள் தயாரிப்பாளராக நுழைந்துள்ளார்.

அண்மையில் வெளியான டிமாண்டி காலனி 2 அவர்கள் வாங்கி வெளியிட்ட முதல்படம்.அப்படம் வெளியான முதல்நாளிலிருந்தே நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

டிமாண்டி காலனி 2 படத்தை சுமார் பதினேழு கோடி கொடுத்து வாங்கியது அந்நிறுவனம்.அப்படம் தமிழ்நாடு திரையரங்குகளிலிருந்து தயாரிப்பாளரின் பங்காக சுமார் பனிரெண்டு கோடி வசூல் செய்யும் என்று சொல்லப்படுகிறது.இப்போதுவரை உள்ள கணக்கு இது என்றும் இரண்டாவது வாரமும் படம் நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

திரையரங்கு வசூல் மட்டுமின்றி இணையம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் பத்து கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது.

இதனால், வாங்கி வெளியிட்ட முதல்படமே இலாபம் என்பதால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளது அந்நிறுவனம்.

இப்படத்தைத் தொடர்ந்து, வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் ரெட்டதல ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றில் வைபவ் படத்தை விக்ரம் ராஜசேகர் மற்றும் அருண் கேசவ் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.டி.இமான் இசையமைக்கிறார்.படத்தில் வைபவுடன் இணைந்து ஜான்விஜய், ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அதுல்யா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது இப்படம்.

க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் தயாராகும் ரெட்டதல படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.செப்டம்பர் மாதத்துக்குள் அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையும் என்று சொல்கிறார்கள்.

படநிறுவனம் தொடங்கியது பற்றி தயாரிப்பாளர் பாபிபாலச்சந்திரன் கூறியதாவது…

நான் 2 படம் அல்லது 3 படம் எடுப்பதற்காக வரவில்லை. ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கவே வந்துள்ளேன். பல படங்களைத் தொடர்ந்து நாங்கள் எடுக்கவுள்ளோம். ஒரு துறையில் வளர்ந்தவனாக நான் இந்தச் சமூகத்திற்கு சிலவற்றைத் திரும்ப அளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நாங்கள் சம்பாதிப்பதை, திரும்ப மக்களுக்குத் தர வேண்டும். கொடுப்பது வாங்குவதை விட மகிழ்ச்சிகரமானது. அதற்கான பல வழிகளில் ஒன்று தான் இந்த கம்பெனி என்றார்.

அவருடைய இந்த நல்ல எண்ணத்துக்கேற்ப அவர் வாங்கி வெளியிட்ட முதல்படமே பெரும் வெற்றி பெற்று நிறுவனத்துக்கு உத்வேகம் கொடுத்துள்ளது.

Related Posts