Uncategorized சினிமா செய்திகள்

வெற்றிமாறன் வீசிய வெடிகுண்டு – நிலைகுலைந்த தயாரிப்பு நிறுவனம்

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.அவர்களோடு பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைட்ய்ம் வசூலையும் பெற்றது.

இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இரண்டாம் பாகம் இவ்வாண்டு தொடக்கத்தில் பொங்கல் விடுமுறையின் போதே வெளியாகும் என்று போன வருடம் சொன்னார்கள்.

இந்த ஆண்டு பிறந்து ஏழு மாதங்கள் கழித்து ஜூலை 17 அன்று இரண்டாம் பாகத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வெளியிடப்பட்ட இரண்டு வடிவமைப்புகளில் ஒன்றில், கையில் ஆயுதத்துடன் ஆக்ரோசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி ஓடி வருவது போன்றும், மற்றொன்றில் விஜய் சேதுபதியும், மஞ்சு வாரியரும் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டிலும், “உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்” என்கிற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. இக்குறளின் பொருள், பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் என்பதாகும்.

ஒரு பக்கம் இரண்டாம் பாகத்தின் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இந்நிலையில் இப்படம் எப்போது வெளியாகும்? என்கிற கேள்விக்கு விடையில்லாமல் இருக்கிறது.

அதற்குக் காரணம்?

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இருபத்தைந்து நாட்கள் வரை இருக்கிறது என்று சொல்லி வண்டலூர் பக்கம் அரங்கம் அமைத்து படப்பிடிப்புக்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் இருபத்தைந்து நாட்கள் படப்பிடிப்பா? என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டால், இது தயாரிப்பு நிறுவனத்திடம் இப்போது சொல்லியிருக்கும் கணக்கு ஆனால் உண்மையில் இன்னும் சுமார் அறுபது நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது என்று சொல்லி அதிர வைக்கிறார்கள்.

இதையே தாங்க முடியாமல் தவிக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் மீது இன்னொரு வெடிகுண்டையும் வீசியிருக்கிறாராம் வெற்றிமாறன்.

அது என்ன?

இப்போதே சுமார் நான்கு மணி நேரத்துக்குப் படம் இருக்கிறது.இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டியும் இருக்கிறது.இதற்கிடையே இன்னொரு வலிமையான கரு வைத் தேடிப்பிடித்துள்ளேன்.அதையும் படமாக்கி படத்தை இரண்டு பாகங்களாக்கி விடலாம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது முதலில் விடுதலை 2 அதன்பின் விடுதலை 3 என்று வெளியிடலாம் என்று சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டு இடிந்து போய்விட்டதாம் தயாரிப்பு நிறுவனம்.நீங்கள் ஆணியே பிடுங்க வேண்டாம் இரண்டாம்பாகத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துக் கொடுங்கள் என்று அவர்கள் சொல்லிவிட்டனராம்.

அதன்பின்னும் வெற்றிமாறன் பிடிவாதமாக இருக்கவே இப்போது மூன்றாம் பாகம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை மூன்றாம் தரப்பினரை வைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்தப் பஞ்சாயத்தின் முடிவு என்னவாகும்? என்பதைச் சில நாட்கள் பொறுத்திருந்துதான் அறியவேண்டும்.

Related Posts