Uncategorized விமர்சனம்

மின்மினி – திரைப்பட விமர்சனம்

ஒருவரின் கனவை வேறிருவர் நனவாக்கும் மாறுபட்ட சிந்தனை கொண்ட படம்.காட்சியனுபவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் மின்மினி.

பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்கள்.அவர்களிருவருக்கும் தனித்தனியே இலட்சியங்கள் இருக்கின்றன.இருவருக்குள்ளும் எப்போதும் மோதல்.இந்தச் சூழலில் ஒரு கொடும் விபத்து.அதில் ஒருவர் உயிரைக் காப்பாற்ற இன்னொருவர் உயிர் துறக்கிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை அன்பு பாசம் நேசம் ஆகிய மெல்லிய உணர்வுகள் கொண்டு சொல்லியிருக்கிறார்கள்.

பிரவீன் கிஷோர், கவுரவ் காளை ஆகிய இருவரும் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள்.இவர்களில் கவுரவ் காளைக்குக் குறைவான வாட்ப்பு.அதையும் நிறைவாகச் செய்திருக்கிறார். அவர் இறந்த பின்னர் அவருடைய அருமை பெருமைகளை உணர்கிறார் பிரவீன்கிஷோர்.அதனால் தன் இலட்சியத்தை விட்டுவிட்டு கவுரவ்காளையின் எண்ணத்தை ஈடேற்ற இருசக்கர வாகனப் பயணம் மேற்கொள்கிறார்.மிக மிக உணர்வுப்பூர்வமான கதாபாத்திரம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் பிரவீன்கிஷோர்.

இன்னொரு முக்கிய கதாபாத்திரம் நாயகி எஸ்தர் அனில்.அவருக்கும் இறந்து போன கவுரவ்காளைக்கும் உயிர் சம்பந்தப்பட்ட உறவு.அதனால் அவரும் கவுரவ்காளையின் வாழ்வை வாழ்கிறார்.அவர் இருந்தபோது செய்ய முடியாததையெல்லாம் செய்கிறார்.மிக அழகான கதாபாத்திரம்.அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

படத்தில் இன்னொரு கதாபாத்திரம் போல் ஒளிப்பதிவாளர் மனோஜ்பரம்ஹம்சா இருக்கிறார்.அவருடைய இரசனை மிக்க காட்சிகள் படத்தின் தன்மையைப் பன்மடங்கு உயர்த்தி இரசிக்க வைத்திருக்கின்றன.

இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா.அவருடைய இசையில் பாடல்கள் இதம்.பின்னணி இசையில் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.பள்ளிக்கூடக் காட்சிகளுக்கும் பயணக்காட்சிகளுக்கும் அவர் இசையில் காட்டியிருக்கும் வேறுபாடு நுட்பமானவை.

இப்படத்தில் சிறுவர்களாக நடித்தவர்களே பெரியவர்கள் ஆகும்வரை அதாவது சுமார் எட்டாண்டுகள் காத்திருந்து படமெடுத்திருக்கிறார் இயக்குநர் ஹலிதாஷமீம்.

இருசக்கர வாகன நெடும்பயணம் என்பதை நாயகனின் இலட்சியம் என்று அவர் எழுதியிருப்பதால் இமாலயப் பகுதிகளைக் கண்குளிரக் காண முடிகிறது. அவரவர் வாழ்வில் ஏற்படும் கசப்பான அனுபவங்களில் தேங்கிவிடாமல் அடுத்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இளைய சமுதாயத்துக்குச் சேதி சொல்லும் இயக்குநர் உடல் உறுப்பு தானம் பற்றி எல்லோருக்கும் அறிவுறுத்தியிருக்கிறார். இவை எதுவுமே வசனங்களிலோ குறிப்பிட்ட காட்சிகளிலோ சொல்லாமல் படம் பார்க்கும் போதே உணர வைத்திருப்பது அவரது பலம்.

– சுரா

Related Posts