குடும்பத்துடன் பார்க்கும் படம் நடித்திருக்கிறேன் – வசந்த்ரவி பெருமிதம்
‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்துவந்த நடிகர் வசந்த்ரவி, அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 18 அன்று வசந்த் ரவியின் பிறந்தநாள்.அதையொட்டி ஏப்ரல் 16 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது….
என்னுடைய பிறந்தநாள் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி வருகிறது. என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறது. நிறையப் பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது.
நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.அது உண்மையிலேயே பெரிய விசயம்.
அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கின்றன.
’ஜெயிலர் 2’ வருகிறது என்ற விசயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது? என்பது எனக்கும் தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் ,“பார்ட்2க்கான லீட் இருக்கு சார்” என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி.
வித்தியாசமான படங்களில் நடித்து மீண்டும் உங்களை சந்திக்கிறேன் அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.
இவ்வாறு அவர் பேசினார்.











