சீமான் பாராட்டிய படம் பரமன் – விவரங்கள்
மறைந்த நடிகை விஜே சித்ரா நடிப்பில் இயக்குநர் சபரிஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘கால்ஸ்’ (calls). கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியானது.அதன்பின் கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் 35 முறைக்கும் மேலாக இந்தப் படம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளது. அதுமட்டுமல்ல அமேசான் பிரைமில் இதுவரை பல கோடி பேருக்கு மேல் இந்தப் படத்தை பார்த்து இரசித்துள்ளனர்.
அப்படம் இயக்குநர் சபரீஸுக்கு முதல் படம். அப்படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஸ், அதற்கு முற்றிலும் மாறாக இப்போது ‘பரமன்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைக் கையில் எடுத்துள்ளார். இப்படத்தில் ‘ஜெய்பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார்.
பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஸே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
தேனி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது.
இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் ஜே.சபரிஸே தயாரித்துள்ள, இப்படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியானது.
முதல்பார்வையை தமிழ்த் திரையுலகின் ஜாம்பவான் இயக்குநர்களான பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், பி வாசு உள்ளிட்ட பலரும் இணைந்து வெளியிட்டு உள்ளனர்.
இயக்குநர் சீமான் இப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு, இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தைச் சொல்ல வருகிறது எனக் கூறி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.











