September 7, 2024
செய்திக் குறிப்புகள்

மீண்டும் ஒரு கதைத்திருட்டு புகார் – வெங்கட்பிரபு மீது குற்றச்சாட்டு

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’.

விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் இயக்குநர் சசிதரன்.

இவர் அட்டகத்தி தினேஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிற படத்தை இயக்கி முடித்து தற்போது பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘லைவ் டெலிகாஸ்ட்’ சீரிஸ் கதை உருவான விதம் குறித்தும் இயக்குநர் வெங்கட்பிரபு குறித்தும் இயக்குநர் சசிதரன் கூறியதாவது,..

“2005 காலகட்டத்தில் வெங்கட்பிரபுவும் நானும் நண்பர்களாக இருந்தோம். அந்தசமயத்தில் அவர் நடித்திருந்த ‘உன்னைச்சரணடைந்தேன்’ என்கிற படம் வெளியாகி இருந்தது.

அப்போது அவரை ஹீரோவாக வைத்து நான் ஒரு படம் இயக்குவதற்காக, இருவரும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். அந்தச்சமயத்தில்தான் தயாரிப்பாளர் எஸ்பிபி சரணிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்
வெங்கட்பிரபு.

ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக மாதவனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறிய எஸ்பிபி சரண் என்னிடம் கதை இருக்கிறதா எனக்கேட்டார்.

அப்போது அவரிடம் நான் ஒரு கதை கூறினேன் அது அவருக்கும் பிடித்துவிட்டது. ஆனால் அதன்பிறகு அதுபற்றிய பேச்சே இல்லை.

ஒருநாள் திடீரென வெங்கட்பிரபு என்னிடம் வந்து, தனது நண்பரான சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிடல் சினிமாஸ் சரவணன் என்பவர் மூலமாக தனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு வந்துள்ளதாக்க் கூறினார். அப்போது ஆங்கில ஹாரர் படம் ஒன்றை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றலாம் என கூறினார்கள்.

ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் நாமே புதிதாக ஒரு கதையை உருவாக்கலாம் என கூறி, சில நாட்களில் ‘நேரடி ஒளிபரப்பு’ என்கிற ஒரு புதிய ஹாரர் கதையை உருவாக்கி வெங்கட்பிரபுவிடம் கூறினேன். அவருக்கும் அந்த கதை பிடித்துவிட்டது உடனே அதை எஸ்பிபி சரணிடம் கூற அவரும் சம்மதித்து, கதை விவாதத்தில் உட்கார்ந்து விட்டனர். அப்போதும் என்னை அழைத்த வெங்கட்பிரபுவும் எஸ்பிபி சரணும் இந்தப்படத்தின் முழு திரைக்கதையையும் வசனத்தையும் என்னையே உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.

ஏற்கனவே எஸ்பிபி சரண், எனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு தருவதாகக் கூறியிருந்ததால், அந்த நம்பிக்கையில் வெங்கட்பிரபு இயக்குவதற்காக இந்த ஹாரர் கதையை நான் முழு மூச்சாக அமர்ந்து உருவாக்கி முடித்தேன். அதன்பிறகு மொத்த டீமையும் அழைத்து நான் உருவாக்கிய மொத்த ஸ்கிரிப்டையும் படித்துக் காட்டினேன்.அனைவருக்குமே பிடித்துவிட்டது.. தயாரிப்பாளர் எஸ்பிபி சரணுக்கு இந்தக்கதை பிடித்திருந்தாலும், படத்திற்கு அதிக செலவாகும் என்பதாலும் இயக்குநர் வெங்கட் பிரபுவை நம்பி அவரது முதல் படமாக அவ்வளவு ரூபாய் செலவு செய்ய முடியாது என்றும் கூறினார்.

அதன்பிறகு சில மாதங்கள் வரை அதுபற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது. ஒரு நாள் அவர்கள் இருவரும் தாங்கள் இணைந்து நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு என்னை வரவழைத்தார்கள். அப்போதும் நான் கூறிய கதையை படமாக்க வேண்டும் என வெங்கட் பிரபு சொல்ல, பட்ஜெட் அதிகம் என மீண்டும் மறுத்தார் எஸ்பிபி சரண். அதேசமயம் வெங்கட் பிரபுவிடம் வேறு ஒரு கதை உள்ளது அதை பண்ணலாம் என்று கூற, அப்போது வெங்கட் பிரபு தெருவோர கிரிக்கெட் விளையாடுபவர்கள் நட்பு என்கிற வரியை மட்டும் என்னிடம் கூறினார்.

ஆனால் வெங்கட் பிரபுவுவோ, தெருவோர கிரிகெட் என்கிற வார்த்தை மட்டுமே தன்னிடம் உள்ளது அதை வைத்து மேற்கொண்டு என்ன செய்வது என்று மீண்டும் என்னிடமே கேட்க,

சரன் எனக்கு இயக்குநர் வாய்ப்பு அளிக்கிறேன் என்று சொன்னதை மட்டுமே நம்பி,
அதன் பிறகு தெருவோர கிரிக்கெட் என்ற புள்ளியை மட்டுமே வைத்து மீண்டும் சென்னை 28 அதற்கான முழு கதையையும் திரைக்கதையையும் நானே தயார் செய்து வசனத்தையும் எழுதினேன். அந்தப்படத்தில் இடம்பெற்ற நடிகர் ஜெய்யின் கதாபாத்திரம் கூட, எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் தான். அப்படி என் திறமை அனைத்தையும் கொட்டி எழுதிய கதைதான் சென்னை-28.

ஆனால் மொத்தப்படத்தின் கதையை எழுதி முடித்து அவர்களிடம் கொடுத்ததுமே அதன்பின் வந்த நாட்களில் வெங்கட் பிரபுவும் எஸ்பிபி சரணும் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால் அந்தப்படத்தில் நான் பணிபுரிவதையே அவர்கள் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அந்த படத்தில் இருந்து நானே விலகுவதாக கூறி வெளியே வந்துவிட்டேன்.

சென்னை 28 படத்தின் டைட்டில் கார்டில் கதை திரைக்கதை வசனம் என என் பெயர் போடும்படி கேட்டேன். ஆனால் திரைக்கதை வசனம் என்று போட்டுவிட்டு அதன் அருகில் சிறியதாக உதவி என்று சிறியதாக போட்டார் வெங்கட்பிரபு. அதன்பிறகு அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றதும், வெங்கட்பிரபு மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என என்னை அழைத்தார். ஆனால் எனக்கு அவருடன் மீண்டும் இணைவதற்கு விருப்பம் இல்லாததால் அவரது அழைப்பை நிராகரித்து விட்டேன்.

அதன்பிறகு அட்டகத்தி தினேஷை வைத்து, தற்போது ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டேன். சென்சார் பணிகள் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில்தான் ஹாட்ஸ்டார் விளம்பரத்தில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற பெயரில் வெங்கட்பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸின் டீசரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் சரவணன் மற்றும் சரன் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதற்காக நான் எழுதிக்கொடுத்து, பட்ஜெட் அதிகம் என ஒதுக்கி வைத்தார்களே, அதே ஸ்கிரிப்ட்டை தான் தற்போது வெங்கட்பிரபு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற வெப் சீரியஸாக இயக்கியுள்ளார்.

கடந்த 2007-லேயே, இந்த கதையை நான் எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளேன். அந்தக் கதைக்கும் கூட ‘நேரடி ஒளிபரப்பு’ என்று டைட்டில் வைத்து தான் பதிவு செய்துள்ளேன். அதையே தற்போது ஆங்கிலத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்கிற பெயரிலேயே வெப்சீரிஸாக இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு.

என் பெயரில் அந்தக்கதை இருக்கும்போது, என்னிடம் அனுமதி பெறாமலேயே, எனக்கு தெரியாமலேயே வெங்கட்பிரபு இவ்வளவு துணிச்சலாக அதை வெப் சீரிஸாக இயக்கி இருக்கிறார் என்றால் அதற்கு பின்னணியில் இன்னொரு வலுவான காரணமும் இருக்கிறது. அதாவது கடந்த 2007-ல் நான் சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருந்தபோது, என்னுடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் பல பொருட்கள் எரிந்து நாசம் ஆனாலும், நான் எழுதி வைத்திருந்த எண்பதுக்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய பெட்டி அதிர்ஷ்டவசமாக தப்பியது. பெரிய அளவில் சேதாரம் இல்லாமல் என்னுடைய கதைகளும் தீயிலிருந்து தப்பின.

இந்த தீ விபத்து குறித்து எப்படியோ கேள்விப்பட்ட வெங்கட்பிரபு, மறுநாள் என்னிடம் அது குறித்து விசாரித்து விட்டு, அப்படியே பேச்சுவாக்கில் என் கதைகள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று கேட்டார். நான் அவையெல்லாம் தீயில் எரிந்து விட்டன என்று கூறினேன். அதை கேட்டுக்கொண்ட வெங்கட் பிரபு, அதன்பிறகு என்னிடம் தொடர்பு கொள்ளவே இல்லை..

இப்போது தான் எனக்கு தெரிகிறது, என்னுடைய கதைகள் எரிந்து விட்டது என்கிற தைரியத்தில் தான், வெங்கட்பிரபு ‘லைவ் டெலிகாஸ்ட்’ கதையை வெப்சீரிஸாக தற்போது எடுத்துள்ளார். வெங்கட்பிரபுவுக்கு இது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயமாக இருந்தது. காரணம் இதே கதையை, அதாவது நான் ஏற்கனவே எழுதிய ‘நேரடி ஒளிபரப்பு’ என்கிற கதையைத்தான் வெப் சீரிஸாக இயக்குவதற்காக ‘வி கோஷ் மீடியா’ என்கிற நிறுவனத்துடன் பேசி கடந்த அக்டோபர் மாதம் தான், அதற்காக முன்பணமும் வாங்கியுள்ளேன்.

இந்த நிலையில்தான் இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிந்து கொண்டேன். இதுகுறித்து தற்போது நான் எழுத்தாளர் சங்கத்திற்கு மெயில் அனுப்பியுள்ளேன். விரைவில் நேரில் சென்று அவர்களிடம் இது குறித்து பேச இருக்கிறேன்.. எனக்கான நியாயத்தை சங்கத்தின் மூலமாக பெற முயற்சி எடுக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் சசிதரன் வெங்கட்பிரபு குறித்தும் அவர் இயக்கியுள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ் குறித்தும் கூறியுள்ள தகவல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Posts