சினிமா செய்திகள்

தனுஷ் அழைப்பு மஞ்சுமல்பாய்ஸ் இயக்குநர் மறுப்பு – விவரம்

அண்மையில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பெரும் வெற்றி பெற்ற மலையாளப்படம் மஞ்சுமல் பாய்ஸ்.அந்தப்படத்தின் இறுதியில் கமல்ஹாசனின் குணா படப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்ததுதான் அப்படத்தின் பெரிய வெற்றிக்குக் காரணம். அப்படத்துக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிந்ததும் படக்குழுவினர் மொத்தமாகக் கிளம்பி சென்னை வந்தனர்.

அவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சந்தானபாரதி ஆகியோரைச் சந்தித்து உரையாடியதும் அந்தப்படத்துக்குத் தமிழ்நாட்டில் அமோக வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. பெருநகரங்களில் திரையரங்குகள் அதிகரிப்பு சிறுநகரங்களிலும் அப்படத்தைத் தாமாக முன்வந்து திரையரங்குக்காரர்கள் திரையிட்டதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் என்று சொல்லப்பட்ட ஆச்சரியங்களும் நிகழ்ந்தன.

ஒரு படம் ஓடினால் அந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்ற பெரும்பாலானோர் முன்வருவது இயல்பு.அதன்படி மஞ்சுபல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரத்துக்கும் ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுவிட்டது.

தமிழ்நாட்டின் முன்னணி நாயகர்கள் அவரோடு இணைய ஆர்வம் காட்டினர். இவர்களில் ஒருபடி மேலே போனார் தனுஷ். தொடக்கத்தில் மரியாதை நிமித்த சந்திப்பு என்று அவரைச் சந்தித்தார். அடுத்து, அந்த இயக்குநரை வீட்டுக்கு அழைத்தார்.வீட்டுக்குப் போனவரிடம், நான் நடிக்கிற மாதிரியான கதை உங்களிடம் இருக்கிறதா? எனக்கேட்டிருக்கிறார்.அப்படி ஒரு கதையும் என்னிடம் இல்லை என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

அதன்பின், இதுவரை இல்லாவிட்டால் என்ன? இப்போது எனக்கான ஒரு கதையை உருவாக்குங்கள்,அதற்குண்டான வசதிகள் அனைத்தையும் நானே செய்து கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் தனுஷ்.

அதையும் மறுத்துவிட்டாராம் இயக்குநர் சிதம்பரம்.அதற்கு அவர் சொன்ன காரணம், நான் தமிழில் படமெடுக்க வேண்டுமெனில் முதலில் தமிழ்நாட்டு கலை கலாச்சாரம் ஆகியன குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.அப்படித் தெரியாமல் எங்கள் ஊர் வழக்கப்படி ஒரு கதையை எழுதினால் அது இங்கு ஒட்டாது என்பதுதான்.

தனுஷாலும் இதை மறுக்கமுடியவில்லை என்பதால் மேற்கொண்டு வற்புறுத்தவில்லை என்கிறார்கள்.

தனுஷ் மட்டுமின்றி வேறு சில தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் முன்தொகை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய அணுகியதாம்.அணுகிய அனைவரிடமும், அடுத்ததும் ஒரு மலையாளப் படத்தைத்தான் நான் இயக்கவிருக்கிறேன்.அதன்பின் தமிழுக்கு வருவது குறித்து யோசிப்பேன் என்று சொல்லி எல்லாவற்றையும் அவர் ஏற்க மறுத்துவிட்டாராம்.

Related Posts