விடைபெற்றார் பவதாரிணி
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் இசையமைப்பாளர்கள் கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா ஆக்யோரின் சகோதரியுமான பவதாரிணி(47) சனவரி 25,2024 அன்று மரணமடைந்தார்.
பின்னணிப் பாடகியான இவர் 1984 இல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்ற மலையாளப் படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானார். பின்பு ராசய்யா, அலெக்சாண்டர், அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவருக்கும் இவருக்கும் திருமணமானது. 2000 ஆம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரணிக்குத் தேசிய விருது கிடைத்தது.சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.
இவரது உடல், சனவரி 26 மாலை சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு தியாகராயநகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இரவு பத்துமணி வரை பல்வேறு திரைப்பிரபலங்களும் பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்பு அவரது உடல் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அந்த வளாகத்தில்தான் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே இடத்தில் பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இன்று மாலை சுமார் ஆறுமணியளவில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கின் இறுதில் இளையராஜா, கார்த்திக்ராஜா, யுவன்சங்கர்ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும், ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடலைப் பாடி பவதாரிணிக்கு கண்ணீர்மல்க பிரியாவிடை கொடுத்தனர்.
அவர் உடல் மறைந்தது, ஆனால் அவர் குரல் காலமெல்லாம் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.











