சினிமா செய்திகள்

கழற்றிவிட்ட கமல் காத்திருக்க வைக்கும் கார்த்தி – எச்.வினோத் புதுமுடிவு

கமல்ஹாசனின் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது.

அதன்பின், அப்படம் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் கமல் நடிப்பார் என்று சொல்லப்பட்டது.்அப்படி நடக்கவில்லை.

அதேசமயம், கமல்ஹாசனின் 234 ஆவது படத்தின் படப்பிடிப்பு சனவரி 18 ஆம் தேதி தொடங்கும் என்று சொல்லப்பட்டது. சில நாட்கள் தள்ளிப்போய் விரைவில் தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்குவதால் எச்.வினோத் படம் கைவிடப்பட்டுவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் உலா வருகிறது.

கூடவே, கமல் படம் இல்லாததால் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம்பாகத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார் என்கிற செய்தியும் வந்துகொண்டிருக்கிறது. இந்தச் செய்தியும் சம்பந்தப்படவர்களால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், எச்.வினோத் முதலில் புதியபடம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

கமல் படம் இல்லையென்றாகிவிட்டது, எனவே கார்த்தியுடன் இணையலாம் என்றால் அவர் தற்போது நடிக்கும் படங்களை முடிக்கவே பல மாதங்கள் ஆகிவிடும் எனும் நிலை.

கமல் கழற்றிவிட்டுவிட்டார், கார்த்தி காத்திருக்க வைக்கிறார் என்பதால் எச்.வினோத்துக்கு வருத்தமாம்.அதோடு, வரிசையாகப் பெரிய கதாநாயகர்கள் அதிகப் பொருட்செலவுப் படங்கள் என்றே போகாமல் நடுநடுவே வளரும் நாயகர்கள் குறைந்த பொருட்செலவிலான படங்களும் இயக்கவேண்டுமென எண்ணியிருக்கிறாராம் எச்.வினோத்.

இதனால், சதுரங்கவேட்டை படம் அளவில் அரசியல் நையாண்டிப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் எச்.வினோத். அதற்கான கதை இருக்கிறது. திரைக்கதை எழுதும் வேலைகளும் வேகமாக நடக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் யோகிபாபுவை கதாநாயகனாக நடிக்க வைக்க எச்.வினோத் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

யோகிபாபுவிடமும் இதுபற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் எச்.வினோத் படமென்றால் மற்ற படங்களுக்குக் கொடுத்திருக்கும் தேதிகளில் மாற்றம் செய்து எச்.வினோத் படத்துக்கு முன்னுரிமை கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறாராம்.

இதனால் இந்தப்படம் முதலில் தொடங்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். பார்ப்போம்.

Related Posts