லால்சலாம் இசை வெளியீட்டுவிழா எப்போது?
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் லால்சலாம். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட இஸ்லாமிய கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.
2024 பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக படமாக்கப்பட்ட பல காட்சிகள் பதிவாகாமல் போனது. ஒட்டுமொத்தப்படக்குழுவும் அதிர்ச்சி அடைந்தது. அதன்பின் அவசர அவசரமாக மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.
இப்போது படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இப்படத்தின் முதல்பாடல் டிசம்பர் 18 அன்று வெளியானது.தேர்த்திருவிழா என்று தொடங்கும் அந்தப்பாடலை விவேக் எழுதியிருந்தார்.

kavignar kabilan
அதைத் தொடர்ந்து அடுத்த பாடல் டிசம்பர் 24 அன்று வெளியாகவிருக்கிறது. இந்தப்பாடலை கவிஞர் கபிலன் எழுதியுள்ளார்.சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.
ஏற்கெனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் கபிலன் எழுதிய பல பாடல்கள் பெரும்வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
அந்த வரிசையில் இந்தப்பாடலும் இணையும் என்று சொல்கிறார்கள்.
அதேபோல் கபிலன் எழுதி சித்ஸ்ரீராம் பாடிய என்னோடு நீயிருந்தால், உன்ன நெனச்சு நெனச்சு உள்ளிட்ட பாடல்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. இந்தப்பாடலும் அப்படியே அமையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இவ்விரு பாடல்கள் வெளியான சில நாட்களுக்குப் பின் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடக்கவிருக்கிறது. அதாவது, சனவரி 4,2024 அன்று நடக்கவிருக்கிறது. பெரிய அளவில் அதை நடத்தத் திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க இன்னொருபுறம், இந்தப்படம் சொன்னபடி பொங்கலுக்கு வருமா? என்று பேசப்படுகிறது.அதற்குக் காரணம் படத்தின் வேலைகள் நிறைவடையாததுதான் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால்,படக்குழுவினரோ படத்தின் வேலைகள் சரியாகப் போய்க்கொண்டிருக்கின்றன.எனவே திட்டமிட்டபடி பொங்கல் நாளையொட்டி படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.
என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.











