ஃபைட்கிளப் படத்தை நிறுத்தி நிவாரணம் – திரையரங்குக்குப் பாராட்டு
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது.
அதனால் தூத்துக்குடி – திருநெல்வேலி சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவாக மாறியிருக்கின்றன. இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ள சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீபாலகிருஷ்ணா டாக்கீஸ் திரையரங்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
என்னை வாழ வைக்கும் தூத்துக்குடி மக்களே இன்று இந்த புயல் சின்னத்தினால் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று நான் அறிவேன் இந்த நிலைமையில் ஆதரவற்ற எல்லோருக்கும் ஸ்ரீபாலகிருஷ்ணா டாக்கீஸ்
திரையரங்கில் உணவு தயாரிக்கப்படுகிறது.இன்று காலை 10:30 மணி முதல் வந்து இங்கே உணவருந்திக் கொள்ளலாம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
என்று தெரிவித்துள்ளனர்.
இந்தத் திரையரங்கில் உறியடி விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ள,இயக்குநர் லோகேஷ்கனகராஜ் வெளியிட்டுள்ள ஃபைட்கிளப் திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.
கனமழை காரணமாக காட்சிகள் நிறுத்தப்பட்டு உணவு தயாரித்து வழங்கும் பணியை திரையரங்க நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது.
இதற்காக திரையரங்க நிர்வாகத்தினரைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.











