விமர்சனம்

அவள் பெயர் ரஜ்னி – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை நடக்கிறது. அது எப்படி? ஏன்? என்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதை. பழகிய கதையை புதிய நடிகர்கள் மூலம் கொடுத்திருக்கும் படம் அவள் பெயர் ரஜ்னி.

நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை முந்திச்சென்று துப்பறியும் வேடம் காளிதாஸ் ஜெயராமுக்கு. அதைச் சிரத்தையாகச் செய்திருக்கிறார். பாசப்பிணைப்பும் உண்மையை அறியும் தவிப்பும் அவருடைய நடிப்பில் சிறப்பு.

நமீதாப்ரமோத், பாதிக்கப்படுகிற பெண்ணாக நடித்திருக்கிறார். அவருடைய கண்களிலேயே பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். காவல்துறை விசாரிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அவ்வளவு எதார்த்தம்.

படத்தின் பெயரிலிருக்கும் ரஜ்னியாக நடித்திருக்கும் லட்சுமிகோபால்சாமி, நாயகியாக வரும் ரெபோமோனிகாஜான் ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

காவலதிகாரியாக வரும் அஸ்வின்குமார் அதற்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார்.சில காட்சிகளில் வந்தாலும் ஷாஜிகுருப் தன் இருப்பைக்காட்டுகிறார்.

காவல்துறையினராக வரும் ரமேஷ்கண்ணாவுக்கு குறைந்த வாய்ப்பு.அதற்குத்தக்க நிறைந்த நடிப்பு.தானி ஓட்டுநராக நடித்திருக்கும் கருணாகரன் வரும் காட்சிகள் சிரிப்பு.

ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளிப்பதிவில் படத்தின் தரம் பன்மடங்கு உயர்கிறது. 4 மியூசிக்ஸ் இசையும் திரைக்கதைக்கு உதவிபுரிந்திருக்கிறது.படத்தொகுப்பின் மூலம் விறுவிறுப்பைக் கூட்ட முயன்றிருக்கிறார் தீபுஜோசப்.

அறிமுக இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் எழுதி இயக்கியிருக்கிறார்.மையக்கதையும் மையக்கதாபாத்திரங்களுக்கும் இருக்கும் இடைவெளியால் திரைக்கதையோட்டத்தில் இருக்கும் தொய்வு பலவீனம்.
ரஜ்னி என்ற பெயர் இருக்கும்போது ரஜினிகாந்த் முகம் இல்லாமலிருந்தால்தான் வியப்பு. அங்கங்கே அதுவும் வந்து முழுமையான தமிழ்ப்படம் போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது.

தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்கிற உணர்வில் எழுதப்பட்ட கதைக்குள் பேய் முலாம் திகில் சாயம் எல்லாம் பூசி வித்தியாசம் காட்டியுள்ளார்.

மையக்கதையும் நடிகர்கள் தேர்வும் இயக்குநரின் பலம். படத்துக்கும் பாதுகாப்பு.

– தனா

Related Posts