மைலாஞ்சி பெயர் மாறியது ஏன்? – அஜயன்பாலா விளக்கம்
கடந்த இருபது வருடங்களாகத் திரைத்துறையில், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருபவர் அஜயன் பாலா.
‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியப் பங்காற்றி உள்ளவர்.2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கியவர்.
இவர், தற்போது முழு நீளத் திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.
அப்படத்தின் பெயர் அஜயன்பாலாவின் மைலாஞ்சி.
‘கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் இயற்கைப் புகைப்படக் கலைஞர் வேடத்தில் நாயகனாக நடிக்கிறார்.சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா (SIIMA) விருதை ஸ்ரீராம் கார்த்திக் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில், ‘கோலிசோடா 2′ புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் சிங்கம்புலி நடிக்கிறார்.
நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ்த்திரையுலகின் தரமான கலைஞர்களைக் கொண்ட கூட்டணி இப்படத்திற்காக பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் கைகோர்த்துள்ளது. இளையராஜா இசையமைக்க செழியன் ஒளிப்பதிவை கவனிக்க,’பொன்னியின் செல்வன்’, ‘ஆர் ஆர் ஆர்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்த இந்தியாவின் முதன்மை படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புக்குப் பொறுப்பேற்க, லால்குடி இளையராஜா கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தைப் பேசும் காதல் கதையான இந்தப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது.
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைப்பான ‘மைலாஞ்சி’, தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ என்று மாற்றப்பட்டுள்ளது.
இப்படத்தின் தலைப்பு மாற்றம் மற்றும் படம் குறித்து அஜயன் பாலா கூறியதாவது…..
திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களின் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்துவிட்டது.அதனால், எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மலைப் பிரதேசத்தைப் பின்னணியாகக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசும் அழகான காதல் கதையாக இதைச் செய்துள்ளோம்.பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படபிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மிகவும் அழகாகவும் உணர்ச்சிபூர்வமான வகையிலும் உருவாகியுள்ளது.செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்.
இப்படத்தின் கதையைப் பெரிதும் விரும்பி பாராட்டுத் தெரிவித்த இசைஞானி இளையராஜா, இதில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் தானே எழுதியுள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அடுத்த வருடம் முதல் காதலர்களின் தேசிய கீதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.











