இந்தியன் 3 தயார் இந்தியன் 2 வுக்குப் படப்பிடிப்பு – ஆச்சரிய தகவல்
கமல்ஹாசன்,காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2. 2017 ஆம் ஆண்டே இந்தப்படத்துக்கான முன்தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன.
பல ஆண்டுகள் பல இடையூறுகள் ஏராளமான சிக்கல்கள் ஆகியனவற்றைச் சந்தித்து இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது இந்தியன் 2.
இடையூறுகள் மற்றும் சிக்கல்கள் விளைவாக நன்மை ஒன்றும் நடந்திருக்கிறது. ஆம், இந்தியன் 2 என்று தொடங்கப்பட்ட இந்தப்படம் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதுபோல இரண்டு படங்களாகிவிட்டன. இந்தியன் 2, இந்தியன் 3 ஆக அவை வெளிவரவரவிருக்கின்றன.
நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் 69 ஆவது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்கள் நடந்தன. அதுமுடிந்ததும் நவம்பர் எட்டாம்தேதியே இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் கமல்ஹாசன். விசாகப்பட்டினத்தில் நவம்பர் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் நடந்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.
தீபாவளிக்காக படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாம்.
விடுமுறைக்குப் பின் 15 ஆம் தேதி வாக்கில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. சுமார் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதோடு மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள்.
இப்போது நடக்கும் படப்பிடிப்பு இந்தியன் 3 படத்துக்கானதா? என்றால் இல்லையாம்.
பிறகு?
இதுவரை எடுத்தவற்றிலேயே இந்தியன் 3 இறுதிசெய்யப்பட்டுவிட்டதாம். இப்போது எடுப்பது இந்தியன் 2 படத்துக்கானது என்கிறார்கள்.
முன்பு திட்டமிட்டபடி படம் எடுத்ததில் நினைத்தபடி படம் வந்துவிட்டது.இப்போது இரண்டு படங்களாக்கிவிட்டதால், இரண்டாம்பாகத்தின் இறுதி மற்றும் மூன்றாம் பாகத்துக்கான முன்னோட்டம் ஆகியனவற்றைப் படமாக்க வேண்டியிருக்கிறதாம். இவை இந்தியன் 2 இல் இடம்பெறவேண்டியவை.
அதைத்தான் இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இதனால் சார்ந்தோர் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நல்லது.











