கடைசிவரை ஒப்புக்கொள்ளாத தனுஷ் – கேப்டன் மில்லர் மாற்றத்தின் பின்னணி
தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர்.பீரியட் எனப்படும் முற்காலக்கதையைக் கொண்டு உருவாகிறது.ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படம் டிசம்பர் 15,2023 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 8,2023) மாலை திடீரென இப்படம் 2024 பொங்கல் நாளையொட்டி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.
அந்த அறிவிப்பு வந்ததிலிலிருந்து பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் ஏற்கெனவே பொங்கல் நாளையொட்டி ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யாரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகும் லால்சலாம், சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், சுந்தர்.சி யின் அரண்மனை 4 ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நான்காவதாக இந்தப்படமும் அறிவிக்கப்பட்டதால்தான் பரபரப்பு.
ஒரேநாளில் நான்கு படங்கள் வெளியீடு,நான்கும் பெரியபடங்கள் என்பதால் திரையரங்குகள் பகிர்வதில் கடும் சிக்கல் ஏற்படும் என்பது ஒருபுறம்.
இன்னொருபக்கம், ரஜினி படம் வரும்போது அந்தப்படத்தை ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் நிலையில் அந்தப்படத்துக்குப் போட்டியாக தன் படத்தை தனுஷ் வெளியிடுகிறார் என்பதும் பரபரப்புக்குக் காரணம்.
ஏன் இப்படி நடந்தது?
பொங்கலின்போது படம் வெளியிட்டால் வியாபாரம், வசூல் ஆகியன அதிகமாக இருக்கும் என்பதால் படவெளியீட்டைப் பொங்கலுக்குத் தள்ளிவைக்கலாம் என்று தனுஷிடம் சொன்னார்களாம். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம், லால்சலாம் வருவதுதான்.
அதன்பின், லால்சலாம் படம் தொழில்நுட்பச் சிக்கலில் சிக்கி இருப்பதால் அது நிச்சயமாகப் பொங்கலுக்கு வராது என்று தனுஷுக்குச் சொல்லப்பட்டதாம். அதை ஒன்றுக்குப் பலமுறை பேசி உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே பொங்கல் வெளியீட்டுக்குத் தனுஷ் சம்மதம் சொன்னாராம்.
தனுஷ் சம்மதம் சொன்ன உடனே அதுகுறித்த அறிவிப்பை சத்யஜோதி நிறுவனம் வெளியிட்டுவிட்டது என்கிறார்கள்.
அதேசமயம், லால்சலாம் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து திட்டமிட்டபடி பொங்கல் வெளியீடு என்று அவர்கள் முடிவெடுத்துவிட்டால் சிக்கல்தான் என்கிறார்கள்.
இதனால் திரைப்பட வியாபாரம் சம்பந்தப்பட்டவர்கள் படபடப்புடனே இருக்கிறார்கள்.
என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.











