இந்தியை எதிர்க்கும் சூர்யா 43 – பரபரப்புத் தகவல்கள்
சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் இதற்கடுத்து சூர்யா நடிக்கவிருக்கும் புதியபடத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.
சூர்யா 43 என்றழைக்கப்படும் அந்தப்படத்தை சுதாகொங்கரா இயக்குகிறார். 2டி நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படத்தில், நஸ்ரியா,துல்கர்சல்மான் உட்பட பலர் நடிக்கவிருக்கிறார்கள்.
நவம்பரில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.
இந்தப்படத்தில் கல்லூரிமாணவர் வேடத்தில் சூர்யா நடிக்கிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
கல்லூரிமாணவர் என்றதும் கல்லூரியில் நடக்கும் காதல்கதை என்று நினைத்துவிட வேண்டாம், தமிழ்நாட்டு அரசியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஓர் அதிரடிப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்று சொல்லப்படுகிறது.
1969 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் காங்கிரசுக்கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது திமுக. பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார்.
அதற்கு மிகப்பெரும் காரணமாக இருந்தது 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் காரணம்.அதில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஈடுபட்டது. குறிப்பாகக் கல்லூரிமாணவர்கள் அந்தப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கினர்.
அன்று மாணவர்களாக இருந்தவர்கள் பலர் பின்னாட்களில் அரசியல்தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் உயரதிகாரிகளாகவும் திகழ்ந்தனர்.
அந்தப்போராட்டத்தை மையப்படுத்தியே சூர்யாவின் 43 ஆவது படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1965 ஆம் ஆண்டைக் காட்டிலும் தீவிரமாக இந்தித் திணிப்பு இப்போது நடந்துகொண்டிருக்கிறது.இன்றைய காலகட்டத்தில்,தமிழ்நாடு அரசு தமிழுக்கு ஆதரவாக இருக்கிறது.ஆனால், ஒன்றிய அரசு எல்லாவகையிலும் இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தி எதிர்ப்பை மையமாகக் கொண்ட கதையில் சூர்யா நடிப்பது அவருக்குப் பெரும்பலமாக அமையும் என்பதில் மாற்றமில்லை.











