சினிமா செய்திகள்

விஷால் தரப்பின் அலட்சியத்தால் வந்த வினை

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடி ரூபாயை வைப்புத்தொகையாக வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன என்பதை சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. நான்கு வங்கி கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்த்தின் விவரங்களின் ஆவணங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. இதனால், நடிகர் விஷால் வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் பிற்பகலில் நடிகர் விஷால் தரப்பு வழக்கறிஞர், விஷால் நேரில் ஆஜராக விலக்குஅளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்தக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி நடிகர் விஷால் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

தொடக்கத்திலேயே விஷால் தரப்பு நீதிமன்றம் சென்றிருந்தால் இந்த உத்தரவு வந்திருக்காது என்றும் அவர் தரப்பு அலட்சியத்தாலேயே இது நடந்தது எனவும் சொல்கிறார்கள்.

கடந்தமுறை நீதிமன்றம் சென்றபோதே கடும் கேள்விகளை எதிர்கொண்ட விஷாலுக்கு அடுத்தமுறையும் அப்படியே நடக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts