சினிமா செய்திகள்

பெரிய விலைக்கு விற்பனை – சாதித்தது சித்தார்த்தின் சித்தா

சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமார் இயக்கியிருக்கிறார்.இப்படத்தை சித்தார்த்தின் இடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், குழந்தை நட்சத்திரம் சரசரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், பல அறிமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைத்துள்ளார்.படத்திற்கான விளம்பரப் பாடல் ஒன்றுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.சுரேஷ் ஏ.பிரசாத் படத்தொகுப்பு செய்ய, சி.எஸ்.பாலச்சந்தர் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நான்கு மொழிகளிலும் நடிகர் சித்தார் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் கூறியதாவது…..

ஒரு கதையை எழுதிவிட்டு அதற்கான நடிகர்களைத் தேடும் நான், சித்தார்த் சாரை மனதில் வைத்து இந்தக் கதையை எழுதினேன். இதற்கு முன்பு நான் இப்படிச் செய்ததில்லை. படம் பண்ணலாம் என்று பேசினோம், அதன் பிறகு அவர் முன்தொகை கொடுத்தார். பிறகு தான் இந்தக் கதையை நான் எழுதினேன். இது கடத்தல் திரில்லர் ஜானர் கதை. மிக இயல்பாகச் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் நடக்கும் நிகழ்வை தனிப்பட்ட வாழ்க்கை முறையோடு தொடர்பு படுத்திக் கொள்வது போல் உருவாக்கியிருக்கிறேன். ஒரு குழந்தை காணாமல் போகிறது, அதனால் ஒரு குடும்பம் எப்படிச் சிதறிப்போகிறது? என்பதையும் அக்குடும்பம் மீண்டும் இணைவதில் உள்ள சிக்கல்களையும் பேசியிருக்கிறோம். படம் பார்க்கும் போது, அந்த நிகழ்வு உங்கள் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக்கொள்வது போல இருக்கும். இப்படி ஒரு கதை எழுத ஒரு நிகழ்வு அல்ல, நம் சமூகத்தில் நடந்த பல நிகழ்வுகள் தூண்டுதலாக இருந்தன.

குடும்பங்கள் போற்றும் படமாக இருக்கும் இதில், சித்தார்த் – நிமிஷா இடையிலான அழகான காதல் கதையும் இருக்கிறது, சித்தப்பா, அண்ணன் மகள் இடையிலான உணர்வுப்பூர்வமான பாசப் போராட்டம் இருக்கிறது. இந்தக் கதையை எழுதும் போதே, எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால், அவருடன் சேர்ந்து படத்தைப் பார்க்க வேண்டும், அப்படிப்பட்ட படமாக இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதினேன் என்றார்.

நடிகர் சித்தார்த் படம் குறித்துக் கூறியது…

சித்தப்பா என்பதன் சுருக்கம் தான் ’சித்தா’.கதாநாயகனுக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. அதை மட்டுமே சொல்லாமால் சமுதாயத்தில் நடக்கும் ஒரு விசயத்தை எந்தவித ஒப்பனையும் இன்றி மிக அழகான ஓர் உலகத்தை இயக்குநர் படைத்திருக்கிறார். இது உலகளாவிய படம்.இப்படம் வெளியான பிறகு பல விவாதங்களை ஏற்படுத்தும்.

தயாரிப்பாளர் பார்வையில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு கடத்தல் திரில்லர் பாணி படம் என்று சொல்லலாம். ஆனால், அதை மிக எதார்த்தமாகச் சொல்லியிருக்கிறோம்.அது தான் இந்தப் படத்தின் சிறப்பு.

நானே இந்தப் படத்தில் புதிதாகத் தெரிகிறேன். நான் திரையுலகுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 21 ஆவது வருடத்தில் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் அருண் குமார் என்னை மீண்டும் நடிகராக அறிமுகப்படுத்துகிறார் என்று உணர்கிறேன்.

நாய்கி நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டி விட்டார். அவர் முதல் நாளில் எப்படி நடித்தாரோ? அதே போல் தான் இறுதி நாள் வரை நடித்தார். எந்த ஒரு இடத்திலும் ஏற்றம் இறக்கம் இல்லாமல்,அந்தக் கதாபாத்திரத்தை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறார். அதைப் பார்த்து நான் வியந்து விட்டேன்.இந்த படத்தில் நான், நிமிஷா, அஞ்சலி நாயர் போன்றவர்கள் தான் சினிமா அனுபவம் உள்ளவர்கள். ஆனால், மற்ற வேடங்களில் நடித்தவர்கள் அனைவரும் இதுவரை எந்த ஒரு கேமரா அனுபவமும் இல்லாதவர்கள், அவர்களை இந்தப் படத்தில் நடிக்க வைத்திருப்பதோடு ஒரு காட்சியில் அல்ல ஒரு வசனம் பேசி நடித்திருப்பவருக்குக் கூட முறையான பயிற்சி அளித்து நடிக்க வைத்திருக்கிறோம்.

இதை விட ஒரு நல்ல படத்தை இனி எடுக்க முடியாது. இப்படி நான் சொல்வது உங்களுக்கு அதிகம் பேசுவது போல் இருக்கும். ஆனால், படத்தை நீங்கள் பார்த்த பிறகு நான் சொல்வது குறைவாகத் தெரியும் அப்படி ஒரு படமாக ‘சித்தா’ இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சித்தார்த் கூறுவதை உறுதிப்படுத்தும் விதமாக இப்போதே இந்தப்படத்தின் இணையஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன பெரிய விலைக்கு விற்பனை ஆகியிருக்கிறது.படத்தைப் பார்த்து அது சிறப்பாக இருந்ததாலேயே அந்த விற்பனை நடந்திருக்கிறது.

Related Posts