சினிமா செய்திகள்

விஜய் 68 இல் பிரபுதேவா பிரசாந்த் – எகிறும் எதிர்பார்ப்பு

விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள அந்தப்படத்தில் த்ரிஷா,அர்ஜுன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதற்கடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தில் விஜய்யை வேறுபடுத்திக் காட்ட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான சோதனைகள் செய்ய விஜய் அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனாகல்பாத்தி மற்றும் தொழில்நுட்பக்குழு சென்றுள்ளது.

இப்படத்தின் திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றன. இந்தப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அம்மூன்று வேடங்களில் இரண்டு வேடங்களுக்கு இணையர் உண்டாம். ஒரு வேடம் தனியாகவே வருமாம்.

விஜய்க்கு இணையர் வேடங்களில் நடிகை சினேகா மற்றும் பிரியங்காமோகன் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

அதோடு இந்தப்படத்தில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் எனப்பன்முகம் கொண்ட பிரபுதேவா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். விஜய்யை வைத்து போக்கிரி,வில்லு ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கும் பிரபுதேவா இந்தப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.

அவர் மட்டுமின்றி இன்னொரு முதன்மையான வேடத்தில் நடிகர் பிரசாந்தை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.படத்தின் கதை அதில் அவருடைய கதாபாத்திரம் ஆகியன பிரசாந்துக்குப் பிடித்திருக்கிறதாம்.அதனால் அவர் நடிப்பதும் உறுதியாகிவிடும் என்கிறார்கள்.

தனிக்கதாநாயகர்களாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபுதேவா,பிரசாந்த் ஆகியோர் இப்படத்தில் நடிக்க முன்வந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts