விமர்சனம்

ரங்கோலி – திரைப்பட விமர்சனம்

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி, தனியார் கைகளுக்குச் சென்று முழுக்க முழுக்க வியாபாரமானதால் நாட்டில் பல சிக்கல்கள். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கைத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். அவற்றிற்கான எதிர்வினைகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது ரங்கோலி.

திரைப்படத்தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகள்வழிப் பேரன், இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் சகோதரி மகன், நடிகர் உதயாவின் சகோதரி மகன் ஆகிய அடையாளங்களோடு இப்படத்தின் நாயகனாகியிருக்கிறார் ஹமரேஷ்.

பள்ளி மாணவன் வேடம் என்பதால் இவரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் போலும். அவரும் அதற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். அரசுப்பள்ளியிலிருந்து பெற்றோர் விருப்பம் காரணமாகத் தனியார் பள்ளிக்குச் சென்று அங்கு சந்திக்கும் அவமானங்களை எதிர்கொள்ளும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்து நற்பெயர் பெறுகிறார்.

பள்ளிமாணவியாக நடித்திருக்கும் புதுமுகம் பிரார்த்தனாவை ஏதோ ஒரு பள்ளியிலிருந்து கூட்டிவந்து நடிக்க வைத்தது போலவே இருக்கிறது.

நாயகனின் பெற்றோராக வரும் ஆடுகளம் முருகதாஸ் சாய்ஸ்ரீ ஆகியோர் சிறப்பு.தகுதிக்கு மீறியதாக இருப்பினும் தம் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்துவிட வேண்டும் எனத் தவிக்கும் தற்காலப் பெற்றோர்களின் பிரதிநிதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.

மருதநாயகத்தின் ஒளிப்பதிவு ஒரு பள்ளிக்குள் சென்று சில மணி நேரம் வேடிக்கை பார்த்து வந்த உணர்வைக் கொடுக்கிறது.

சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையும் அளவு.

எழுதி இயக்கியிருக்கும் வாலி மோகன்தாஸ், கல்வி வியாபாரமானது குறித்துப் பல விமர்சனங்களை முன்வைத்து சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தாலும் சிந்திக்கிற மாதிரி செய்திருக்கிறார்.

இவ்வளவு நல்ல கருத்துகளைப் பேசியிருக்கும் அவர், பள்ளிச் சீருடையில் மாணவர்கள் காதலிப்பது போன்ற தவறான காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

– குமார்

Related Posts