விஜய் டிவி விற்பனைக்கு – வாங்கப் போட்டியிடும் மூவர்
தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது விஜய் தொலைக்காட்சி. தொடக்கத்தில் வெறும் விஜய்யாக இருந்த அது ஸ்டார் குழுமம் அந்தத் தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது.
விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியனவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது அதிரடியாக விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.
ஹாட்ஸ்டார் தளத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை மட்டும் விற்பனை செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இந்தச் செய்தியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் விட்டார்கள்.
இதன் விளைவாக அந்தத் தொலைக்காட்சியை வாங்க மூன்று முன்னணி நிறுவனங்கள் களத்தில் இறங்கியிருக்கின்றனவாம்.
அவற்றில் முதலில் இருப்பது அம்பானியின் ஜியோ நிறுவனம். அந்நிறுவனம் ஒன்றியமெங்கும் ஓடிடி தளத்தை நிறுவும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நேரத்தில் விஜய் விற்பனைக்கு என்றவுடன் ஒட்டுமொத்தமாக அதைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறதாம்.
தொடக்கத்தில் ஜியோ நிறுவனம், நீ பாதி நான் பாதி என்று பகிர்ந்து விஜய் தொலைக்காட்சியை நடத்தலாம் என்று டிஸ்னி நிறுவனத்திடம் பேசத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஜியோ எதிர்பாராத வண்ணம் மேலும் இருவர் போட்டிக்கு வந்துவிட்டதால் மொத்தமாக வாங்கும் முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக இந்தியஒன்றியத்தின் புகழ்பெற்ற தொழில்நிறுவனமான டாடா நிறுவனமும் இந்தத் துறையில் இறங்க முடிவெடுத்து விஜய் தொலைக்காட்சியை வாங்க முன்வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இவற்றோடு சோனி நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியை வாங்க முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறதென்கிறார்கள்.
ஒரேநேரத்தில் மூன்று பெரிய நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதால் யார் கைக்கு விஜய் தொலைக்காட்சி போய்ச்சேரும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.











