விமர்சனம்

அநீதி – திரைப்பட விமர்சனம்

உணவு விநியோகிக்கும் இளைஞன், அவனுக்கு ஒரு மனச்சிக்கல், அவனுக்கு ஒரு காதல், அவனுக்கு ஒரு ஆபத்து இவற்றை எப்படி எதிர்கொள்கிறான்? என்கிற மையக்கதைக்குள் வரும் பெருநிறுவனங்கள் மற்றும் நிகழ்வுகளைப் பொதுவுடைமைக் கண்ணாடியால் பார்த்து எடுக்கப்பட்டிருக்கும் படம் அநீதி.

எதிர்மறை நாயகனாகப் பார்த்துவந்த அர்ஜூன் தாஸ், கதாநாயகனாக நடித்திருக்கிறார்.எதிர்நாயகனுக்குப் பலமாக அமைந்திருந்த இறுகிய முகம், கனத்த குரல், கூர்ந்த பார்வை ஆகியன இந்தக் கதாநாயகன் பாத்திரத்துக்கும் அப்படியே பொருந்தியிருக்கிறது வியப்பு.காதல் காட்சிகளில் இளகுவது அநீதி கண்டு கொதிப்பது ஆகிய நேரங்களில் கூட அளவாக நடித்து பாத்திரத்துக்கும் படத்துக்கும் பலமாக இருக்கிறார்.

வீட்டுவேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறார் நாயகி துஷாராவிஜயன். பயம், படபடப்பு, நடுக்கம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி பார்ப்போருக்கும் பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார்.

காளிவெங்கட் நடிப்பும் வட்டாரவழக்கு மொழியும் வரவேற்பைப் பெறுகிறது. சாந்தா தனஞ்செயன்,வனிதா விஜயகுமார், சுரேஷ்சக்ரவர்த்தி, அர்ஜுன்சிதம்பரம் உள்ளிட்டோரும் தங்கள் வேடங்களைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஜீ.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை பெரும்பலம்.

ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே, இயக்குநர் வசந்தபாலனின் எண்ணங்களில் இருந்த காட்சிகளை அப்படியே திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

முதலாளித்துவத்துக்கும் மனிதநேயத்துக்கும் சம்பந்தமே இல்லை எனும் உண்மையைச் சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.ஆனால் முதலாளிகளில் சிறுமுதலாளிகள் பெருமுதலாளிகள் என்கிற வேறுபாடுகள் இருக்கின்றன என்பதும் அந்த அளவு மாற்றம் பல பண்பு மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதையும் அவர் உணரவில்லை என்பதை முன்கதை சொல்லும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

ஓர் அடர்ந்த கதைக்குள், மழை பெய்யுது, நின்னுட்டுப் போங்கன்னு சொன்ன குரலும், தலை துவட்ட துண்டு குடுத்த கையும் கண்டிப்பா ஒரு முதலாளியோடது இல்லன்னு தெரியும் என்கிற மென்வசனம் முதலாளித்துவத்தின் கொடுமையைச் சொல்கிறது.

தண்ணி விக்கிற விலைக்கு தண்ணி கேக்குதா?, போற போக்க பாத்தா இந்தியான்னு எழுதி கீழ பிரைவேட் லிமிடட் போட்ருவாங்க போல ஆகிய வசனங்களில் இன்றைய ஒன்றியத்தின் இழிநிலையையும் வெளிப்படுத்தியிருக்கிறார் வசந்தபாலன்.

அநீதி – அர்ஜுன்தாஸின் நீதி

– அறிவன்

Related Posts