இராணுவ அதிகாரியின் வாழ்க்கைக் கதையில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் தயாராகியுள்ள அயலான் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது.
தற்போது அவர், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதியபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகும் அந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் இணையராக சாய்பல்லவி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் நடந்தது. பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனின் தோற்றம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக தலையில் தொப்பி போட்டு மறைத்துக் கொண்டிருக்கிறார். நேற்று நடந்த மாவீரன் விளம்பர நிகழ்விலும் அவ்வாறே அவர் கலந்துகொண்டார்.
இந்தப்படத்தில் அவர் இராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டுவருகிறது.நடிகர் விஜய்க்கு துப்பாக்கி படம் அமைந்தது போல இந்தப்படம் இவருக்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அவ்வளவு உறுதியாகச் சொல்வதற்கான காரணம் இருக்கிறதாம்.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய இராணுவத்தில் மேஜராக இருந்து ஜம்முகாஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையின்போது மிகத் துணிச்சலாகச் செயல்பட்ட காரணத்தால் இந்தியா முழுதும் புகழ்பெற்ற ஓர் இளம் அதிகாரியின் வாழ்க்கைக் கதையை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்படுகிறதாம்.
அதனால் அவருடைய தோற்றத்தை ஒத்து இவருடைய தோற்றமும் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
முழுமையான ஆக்சன் படம் என்று சொல்லக்கூடிய வகையில் தயாராகும் இந்தப்படத்தில் வீரம் மட்டுமின்றி கல்மனதையும் கலங்க வைக்கும் பாச நிகழ்வுகளும் இருக்கின்றன என்பதால் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று படம் சார்ந்தோர் திடமாக நம்புகிறார்கள்.











