சினிமா செய்திகள்

சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் வியாபாரம் – ஆச்சரிய தகவல்

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படம் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தின் இரண்டாம்பாகமான தில்லுக்கு துட்டு 2, 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையும் ராம்பாலாவே இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டது. இம்முறை ராம்பாலா இயக்கவில்லை. அவரிடம் பணியாற்றிய பிரேமானந்த் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இப்படத்துக்கு டிடி ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தில்லுக்கு துட்டு 3 என்று வைக்காமல் இந்தப் பெயரை வைக்கக் காரணம் என்ன? 

தில்லுக்கு துட்டு இந்தி உரிமையைப் பெற்ற நிறுவனம் ஏற்படுத்திய சட்டச்சிக்கல் காரணமாக அந்தப்பெயரை வைக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

சுரபி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ரெடின்கிங்ஸ்லி, மாறன், மசூம்சங்கர், பிரதீப்ராவத், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஜூலை 28 ஆம் தேதி வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை வியாபாரம் நடந்து முடிந்திருக்கிறது.

சந்தானத்தின் நண்பர் சி.ரமேஷ்குமார் ஆர்.கே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கும்  இப்படத்தை மதுரையைச் சேர்ந்த பிரபல விநியோகஸ்தார் அழகர் வாங்கி வெளியிடுகிறார். 

இப்படத்தை எம்ஜி எனப்படும் மினிமம்கியாரண்டி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்கள்.
அதன் விலை சுமார் ஆறரை கோடி என்று சொல்லப்படுகிறது.

இது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம்
சந்தானத்தின் முந்தைய படங்கள் சரியாகப் போகாதது தான்.

அப்படிப்பட்ட நிலையிலும் இந்தப்படத்துக்கு இவ்வளவு விலை கொடுத்திருப்பதற்குக் காரணம், படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்பதுதான் என்கிறார்கள்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Posts