சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் காதல்கதையை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் படத்தின் பெயரையும் குறுமுன்னோட்டத்தையும் இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

அதன்படி அந்தப்படத்தின் பெயர் சபாநாயகன்.

இந்தப்படத்தை கமல்ஹாசனிடம், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சி.எஸ்.கார்த்திகேயன் எழுதி இயக்குகிறார். 

அசோக்செல்வனின் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் இருப்பதுபோல் கதைகள் அமைகின்றன. அது இந்தப்படத்திலும் தொடர்கிறது.

இப்படத்திலும் மூன்று நாயகிகள். மேகா ஆகாஷ், சாந்தினி ஆகியோரோடு மலையாளத்தில் துல்கர்சல்மான்  படம் உள்ளிட்டு சில படங்களில் நாயகியாக நடித்துள்ள கார்த்திகாமுரளிதரன், இந்தப்படத்தின் மூலம் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

பாலசுப்பிரமணியம், தினேஷ்குமார், பிரபு ஆகிய மூவர் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தை க்ளியர்வாட்டர் ஃபிலிம்ஸ் அரவிந்தன் மற்றும் ஐ சினிமா ஐயப்பன் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இளைஞர்களை  ஈர்க்கும் காதல்கதையை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பெரிய கதாநாயகர்களின் படங்களைத் தாண்டி திரையரங்குகளில் அதிக வசூலைக் குவிக்கும் படங்களின் கதைக்களம் இளைஞர்களைக் கவரும் கதைக்களமாக இருக்க வேண்டும். இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு லவ்டுடே மற்றும் டாடா ஆகிய படங்கள்.

அந்த வரிசையில் இந்தப்படம் இளைஞர்கள் மற்றும் யுவதிகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.பள்ளி, கல்லூரி காலகட்டங்களில் நடக்கும் கதையாக இது அமைந்திருக்கிறது. எனவே இது நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாகக் கூறுகிறார்கள்.

குறுமுன்னோட்டம் (டீசர்) காண….

Related Posts