ஏழேமுக்கால் கோடியால் ஏழரை – ருத்ரன் பட சிக்கல் விவரம்
பொல்லாதவன்,ஆடுகளம்,ஜிகர்தண்டா உட்பட பல படங்களைத் தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தத் திரைப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் குரல்மாற்று (டப்பிங்) உரிமையை ரெவன்சா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
12 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக,ஃபைவ்ஸ்டார் கதிரேசனைத் தொடர்பு கொண்டால் அவர் ரெவன்சா நிறுவனத்தின் தொடர்பு எல்லைக்குள் வரவில்லையாம். அதோடு, ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
இதனால், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று சொல்லி படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என ரெவன்சா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதனால் படம் நாளை வெளியாகுமா? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுந்துள்ளது.
ஏன் இந்த வழக்கு? எதற்காக இந்தத் தடை? என்று விசாரித்தால், பனிரெண்டேகால் கோடிக்கு இந்தப்படத்தின் உரிமையைப் பெற்ற அந்நிறுவனம், சுமார் இருபது கோடி வரை வியாபாரம் செய்துவிட்டதாம். இதனால் சுமார் ஏழேமுக்கால் கோடி அவர்களுக்கு இலாபம் என்று சொல்லப்படுகிறது. நம் படத்தை வைத்து இவர்கள் இவ்வளவு இலாபம் சம்பாதிப்பதா? என்று பதறிய ஃபைவ்ஸ்டார் கதிரேசன், மேற்கொண்டு நாலரை கோடி எனக்குக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு, உங்களுக்குப் பத்துகோடி கொடுத்து சுமார் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கான வட்டிக் கணக்குப் போட்டால் எங்களுக்கு நட்டம்தான் ஏற்படும். அப்ப்டியிருக்கும்போது கூடுதலாகப் பணம் கேட்பதா? அப்படித் தரவியலாது என்று சொல்லிவிட்டார்களாம்.
இதனால், அந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக இரத்து செய்துவிட்டதாகச் சொல்லிவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார் கதிரேசன். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தவர் நீதிமன்றம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
இப்போது தடை வந்த பின்பு, அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறாராம் கதிரேசன். எனவே படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிவிடும் என்கிறார்கள்.










