சினிமா செய்திகள்

விலை போன மைக்கேல் ராயப்பன் – தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பரபரப்பு

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் இரண்டு அணிகளும் மற்றும் பல சுயேச்சைகளும் களமிறங்கியுள்ளனர்.

இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக இராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் ஆகியோர். பொருளாளராக சந்திரபிரகாஷ்ஜெயின் போட்டியிடவிருக்கிறார். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணைச்செயலாளர் பதவிக்கு சவுந்தர் போட்டியிடுகிறார்.

இன்னொரு அணியில், இப்போது செயலாளராக இருக்கும் மன்னன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

அந்த அணியில் தலைவர் பதவிக்கு மன்னனும் செயலாளர்களாக கமீலாநாசர் மற்றும் தேனப்பன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த அணியில் பொருளாளராக லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் போட்டியிடுகிறார்.இணைச்செயலாளர் பதவிக்கு சி.மணிகண்டன் போட்டியிடுகிறார்.

துணைத்தலைவர்களாக மைக்கேல்ராயப்பன், விடியல்ராஜு ஆகியோர் போட்டியிடுவதாக இருந்தது.

ஆனால், கடைசிநேரத்தில் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக இருந்த மைக்கேல் ராயப்பன் விலகிக் கொண்டார்.

அதற்குக் காரணம், அவரை எதிரணியினர் கவனித்துவிட்டதுதான் என்கிறார்கள்.

தேனாண்டாள் முரளி அணியில் துணைத்தலைவர் பதவிகளுக்கு இரண்டு பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் களமிறங்குகிறார்கள். அதனால் எதிரணியில் இருக்கும் இரண்டு துணைத்தலைவர்களையும் போட்டியிலிருந்து விலக்கிவிடத் திட்டமிட்டார்களாம். அதில் பாதிவெற்றி கிடைத்துவிட்டதாம்.

மைக்கேல் ராயப்பனைச் சந்தித்த எதிரணியினர், அவருடைய உடனடிச் சிக்கலுக்காக சுமார் இரண்டரைகோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாகக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் அவருடைய நீண்டகாலச் சிக்கலான சிம்பு சம்பந்தப்பட்ட சிக்கலை தேர்தல் முடிவடைந்ததும் பேசி மைக்கேல்ராயப்பனுக்கு நட்ட ஈடு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்கிற வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்தக் காரணங்களால் அவர் போட்டியிலிருந்து விலகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதுபோல் மன்னன் அணியில் உள்ள வேறு சிலரையும் போட்டியிலிருந்து விலக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.

இதுமட்டுமின்றி தேனாண்டாள் முரளி அணியில் போட்டியிடும் பலரும், எங்கள் அணியை வெற்றி பெறச் செய்தால்தான் அரசாங்கத்திடமிருந்து பல நன்மைகள் கிடைக்கும் என்று பரப்புரை செய்துகொண்டிருக்கிறார்களாம்.

ஒரு பக்கம் ஆட்களை போட்டியிலிருந்து விலக வைத்தல், இன்னொரு பக்கம் அரசாங்கத்தின் பெயரைச் சொல்லி பரப்புரை செய்வது ஆகியனவற்றால் பொதுவான தயாரிப்பாளர்கள் கோபமடைந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

Related Posts