விடுதலை – திரைப்பட விமர்சனம்
கனிமவளக் கொள்ளை அதற்கெதிரான மக்கள் போராட்டம், அவற்றை தந்திரமாகவும் ஆணவமாகவும் ஒடுக்கத் துடிக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் ஆகியனவற்றோடு காவல்துறைக்குள்ளேயே நடக்கும் அட்டூழியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது விடுதலை.
கடைநிலைக் காவலர் குமரேசன் வேடத்துக்கு அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் சூரி. சும்மா சிரிக்க வைத்துவிட்டுப் போகிற ஆள் மட்டும் இல்லை, நன்றாக நடித்து உங்களைக் கலங்க வைத்து கவரவும் தெரியும் என்று காட்டிவிட்டார் சூரி. அவரை நம்பி எந்த வேடத்தையும் கொடுக்கலாம்.
சூரியின் காதலியாக வரும் பவானிஶ்ரீ எளிமையான, இனிமையான அழகு.காட்டுமல்லியாய் மலர்ந்து மணம் பரப்புகிறார்.
காவல்துறை அதிகாரிகளாக வரும் சேத்தன், கவுதம்மேனன், ராஜீவ்மேனன், தமிழ் ஆகியோர்சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறாரகள்.
வாத்தியார் வாத்தியார் என்று படம் முழுக்க அவரைப் பற்றிப் பேசினாலும் படத்தில் கொஞ்ச நேரமே வருகிறார் விஜய்சேதுபதி. அதிலும் தன் முத்திரையைப் பதித்துப் பாராட்டுப் பெறுகிறார விஜய்சேதுபதி.மக்கள் அவரைப் பாதுகாக்கத் துடிப்பதும் மக்களுக்காக அவர் பிடிபடுவதும் பெருமிதத்தால் நெஞ்சம் விம்மும் காட்சிகள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்க சுகமாக இருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் பின்னணி இசையும் இரண்டறக்கலந்து கொடுக்கும் காட்சி அனுபவங்கள் சில்லிட வைக்கின்றன.
கடைநிலைக் காவலருக்கு அந்தத் துறையில் நடக்கும் கொடுமைகள், ஒடுக்கப்படும் அதே காவலர் உள்ளிட்ட அந்தத்துறை மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் அடக்குமுறைகள் ஆகியனவற்றோடு தமிழ்நாட்டில் பலத்த அதிரவுகளை ஏற்படுத்திய அரியலூர் தொடர்வண்டி வெடிப்பு, வாச்சாத்தி கொடுமைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி நெருப்பு மூட்டியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
விடுதலை உருவாக்கும பல அதிர்வுகளை.
– ஆநிறையன்











