அயோத்தி – திரைப்பட விமர்சனம்
இங்கிருப்பவர்கள் காசிக்குப் போக ஆசைப்படுவார்கள் காசியில் இருப்பவர்களுக்கோ இராமேஸ்வரம் வர ஆசை. ஒரு தீபாவளி நாளில் இராமேஸ்வரத்துக்கு வரும் வட இந்தியக் குடும்பம் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திப்பதும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளும்தாம் அயோத்தி படம்.
வட இந்தியக்குடும்பத் தலைவராக நடித்திருக்கும் யஷ்பால் குடும்பத் தலைவியாக வரும் அஞ்சு அஸ்ராணி, மகளாக நடித்திருக்கும் பிரீத்திஅஸ்ராணி உள்ளிட்டோர் மிப்பொருத்தமாக நடித்திருப்பது படத்துக்குப் பலம்.
அதிலும் யஷ்பால் கதாபாத்திரம் வடக்கர்கள் மீதான அறுவெறுப்பை புதுப்பிக்கிறது.
வந்த இடத்தில் அக்குடும்பம் சிக்கலைச் சந்திக்கும் நேரத்தில் உதவி செய்பவராக வருகிறார் சசிகுமார்.
இந்த மாதிரி வேடம் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.சரியாகச் செய்து நல்ல வரவேற்பைப் பெறுகிறார்.
புகழ், போஸ்வெங்கட்,வினோத் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணிஇசை கவனிக்க வைக்கிறது.
மாதேஷ்மாணிக்கத்தின் ஒளிப்பதிவு கதையின் தன்மையைச் சரியாக்க் காட்சிப்படுத்தியிருக்கிறது.
படத்தின் பெயர் தொடங்கி இராம்பக்தரின் சகிக்கவியலா நடவடிக்கைகள், தமிழ்நாட்டின் தன்மையைச் சொல்லும் சசிகுமார் வேடம் இவை எல்லாவற்றிற்கும் மேலாக கடைசியில் சொல்லப்படும் சசிகுமாரின் பாத்திரப்பெயர் ஆகிய எல்லாவற்றிலும் தற்கால இந்திய ஒன்றியத்தைச் சித்திரமாக்கியுள்ளார் இயக்குநர் மந்திரமூர்ததி.
படத்தில் ஓரிடத்தில் கூட அரசியல் இல்லை ஆனால் மொத்தப்படமும் தற்போது ஆளும் வெறுப்பரசியலுக்கு எதிரான அன்பரசியல்.
– குமார்











