வாத்தி – திரைப்பட விமர்சனம்
இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டத்தில், எண்பத்தி ஆறாவது திருத்தம் 2002 இல், இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்து, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக்க் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது.
ஆனால் அதை யாருமே மதிப்பதில்லை. இந்நூற்றாண்டின் மாபெரும் வியாபாரப் பொருளாகியிருக்கிறது கல்வி.
இந்த அவலத்தை, காதல், மோதல், நகைச்சுவை ஆகிய அம்சங்களோடு கலந்து வெளிப்படுத்தியிருக்கும் படம் வாத்தி.
இக்கதையைத் தேர்வு செய்ததற்காகவே தனுஷை பாராட்டலாம்.அவர் நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை. அவர் வகுப்பில் படிக்கும் அனைவும் தேர்ச்சி என்பதும் பாடம் கற்பிக்கத் அதனை வரும்போது புதிய உத்தியைக் கடைபிடிப்பதும் சுவாரசியம்.
நாயகி சம்யுக்தாவுக்கும் ஆசிரியை வேடம். மெழுகுபொம்மை போல் இருக்கிறார்.
மற்ற படங்களில் இருந்து நேரெதிரான வேடம் சமுத்திரக்கனிக்கு.அனுபவ நடிப்பால் அதைச் சிறப்பாகச் செய்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.
பாரதிராஜா, ஆடுகளம் நரேன், கென் கருணாஸ் உள்ளிட்ட சிலர் தவிர படமெங்கும் தெலுங்கு நடிகர்கள் ஆதிக்கம்.
ஜே.யுவராஜின் ஒளிப்பதிவில் காட்சிகளில் இனிமை. சண்டைக்காட்சிகளில் அனல்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் அடியாத்தி பாடல் சுகம். மற்ற பாடல்களிலும் குறைவில்லை. பின்னணி இசை நன்று.
திரைக்கதை மற்றும் சில காட்சியமைப்புகளின் பலவீனத்தை மையக்கதையின் பலம் மறக்க வைக்கிறது.இதனால் இயக்குநர் வெங்கி அட்லூரியைப் பாராட்டலாம்.
– பாரதி











