செயற்கரிய செய்தார் சிவகுமார்
திரையுலக மார்கண்டேயன் என்றழைக்கப்படும் நடிகர் சிவகுமார், 1965 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக நுழைந்து எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருபெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இணையாக உயர்ந்தவர்.
திரையுலகைத் தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களிலும் பல ஆண்டுகள் நிறைந்திருந்தார்.
சூர்யா, கார்த்தி ஆகிய அவருடைய இரண்டு மகன்களும் இன்றைய தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகர்களாகத் திகழ்கின்றனர்.
தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களும் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தாரை உச்சிமுகர்ந்து கொண்டாடிவருகின்றனர்.
சமுதாயம் தமக்களித்த அங்கீகாரத்தையும் பொன்னையும் பொருளையும் தாமே அனுபவிக்க வேண்டுமென எண்ணாமல் சிவகுமார் சூர்யா கார்த்தி ஆகியோர் கல்வி மற்றும் வேளாண்மை உள்ளிட்ட பலவற்றிற்கு
ஆண்டுதோறும் அள்ளிக்கொடுத்து வருகின்றனர்.
இந்தப்புகழும் பொருளும் தம் உழைப்புக்குக் கிடைத்தது எனினும் அவற்றை வஞ்சகமின்றி வாரிவழங்கிய தமிழ்ச்சமுதாயத்துக்கு நாம் என்ன செய்தோம்? என்று சிந்தித்த சிவகுமார், கம்பராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றினை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அவர்களை அறவழிப்படுத்தினார்.
அவற்றைத் தொடர்ந்து தமிழின் பெருமை உலகப்பொதுமறை திருக்குறளைக் கையிலெடுத்தார்.1330 குறள்களில் நூறு குறள்களைத் தேர்ந்தெடுத்து அக்குறளுக்கேற்ப வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைக் கலந்து மிகச்சிறப்பான உரை நிகழ்த்தியுள்ளார்.
2022 ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவின்போது சுமார் நான்குமணிநேரம் அவர் ஆற்றிய உரை உலகில் முதன்முறை.
வேண்டுதல் வேண்டாமை என்கிற குறளில் தொடங்கி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற குறள் வரை அவர் சுட்டிய ஆளுமைகளும் அவர்கள் வாழ்வும் தமிழ்ச்சமுதாயத்துக்கு வழிகாட்டிகள் என்றால் மிகையில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருவள்ளுவரின் சிந்தனைகள் இன்றைக்கும் அப்படியே பொருந்துகின்றன என்கிற வியப்பு மட்டுமின்றி அவை சொல்லும் அறங்கள் எவ்வளவு மேன்மையானவை என்பதையும் சிவகுமாரின் உரை வெளிப்படுத்தி வியக்க வைக்கிறது.
வருங்காலத் தலைமுறைக்கும் மாணாக்கர்களுக்கும் ஒரு சிறந்த வழித்துணையாக இவ்வுரை திகழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் என்கிற குறளுக்கு தன்னை வைத்து சுயவிமர்சனம் செய்திருக்கிறார் சிவகுமார்.
உண்மையில் அவருக்குப் பொருத்தமான குறள், செயற்கரிய செய்வார் பெரியர் என்று தொடங்கும் குறள்தாம்.
வாழ்க நீ எம்மான்! தொடர்க உம் தொண்டு!
– அ.தமிழன்பன்











