சினிமா செய்திகள்

5,6 தேதிகளில் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு – நடிப்பது யார்?

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாகத் தயாரான படம் பொன்னியின்செல்வன்.விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இப்படத்தின் முதல்பாகம் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்பாகம் வெளியாகும்போதே மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. முதல்பாகத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி காரணமாக, மேலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி புதிய காட்சிகளைச் சேர்க்க இயக்குநர் மணிரத்னம் நினைத்தாராம்.

அதற்காக பல காட்சிகளைச் சிந்தித்து அவற்றைப் படமாக்க முனைந்தால் நடிகர்களின் தேதி கிடைக்கவில்லையாம்.

கார்த்தியை வைத்துப் படப்பிடிப்பு, ஐஸ்வர்யாராயை வைத்துப் படப்பிடிப்பு என்றெல்லாம் திட்டமிடப்பட்டதாகவும் இப்போது அவை சாத்தியமாகவில்லை என்றும் சொல்கிறார்கள்.

கடைசியாக இப்போது சனவரி 5, 6 தேதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். சென்னைக்கு அருகேயுள்ள படப்பை வனப்பகுதியில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

அப்படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கும் நடிகர் ரியாஸ்கான் மட்டும்தானாம். சோமன்சாம்புவன் என்கிற சிறிய வேடத்தில் நடித்துள்ள அவருடைய தேதிதான் கிடைத்தது போலும். அவரை மட்டும் வைத்துப் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்கள்.

அதேசமயம் படப்பிடிப்பு இதோடு முடியவில்லை இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அதில், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்துப் படமாக்குவார்கள் என்று சொல்கிறார்கள்.

Related Posts