செம்பி – திரைப்பட விமர்சனம்
கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாட்டி வீராயி (கோவைசரளா) பேத்தி செம்பி (நிலா) ஆகியோர் தேன்,காட்டுமுட்டை உள்ளிட்ட பொருட்களை விற்று வாழ்க்கை நடத்துகிறார்கள். பேத்தி செம்பியைப் படிக்க வைத்து மருத்துவராக்க வேண்டுமென்பது பாட்டியின் கனவு.
ஒருநாள் சிறுமி செம்பிக்கு நடக்கும் கொடூர நிகழ்வு அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது. அதை வீராயி எப்படி எதிர்கொள்கிறார்? என்பதுதான் படம்.
இவ்வளவு நாட்கள் கெக்கே பிக்கேவெனப் பேசி நம்மைச் சிரிக்க வைத்த கோவைசரளாதானா இது? என்று வியக்கும் அளவுக்கு தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார் கோவைசரளா. பேத்திக்கு நடந்த கொடுமை கேட்டு விக்கித்து நிற்கும் காட்சி மற்றும் அதை ஏற்கவே முடியாமல் அங்குமிங்கும் அலைந்து தவிக்கும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.
அம்மாச்சி என்று அழகாக அழைக்கும் பேத்தி நிலாவின் நடிப்பு சிறப்பு. தேர்ந்த நடிகர்கள் மத்தியில் அவர்களை மிஞ்சிய நடிப்பை வெளிப்படுத்திக் கலங்க வைத்திருக்கிறார் நிலா.
வழக்குரைஞராக வரும் அஸ்வின், அமைதியாக இருந்துகொண்டு பார்வையாளர்களை ஆர்ப்பரிக்க வைக்கிறார். அழுத்தமான ஆழமான கதாபாத்திரம் அதைச் சரியாக வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார்.
தம்பிராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, கு.ஞானசம்பந்தம் உட்பட படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அனைவருமே நன்று.
ஜீவனின் ஒளிப்பதிவில் இயற்கை அழகுக் காட்சிகள் கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கின்றன. ஒரு பேருந்துக்குள் நடக்கும் அவ்வளவு காட்சிகளையும் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்.
நிவாஸ்கேபிரசன்னாவின் இசையில் பாடல்கள் உருக வைக்கின்றன. பின்னணி இசையில் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.
பேருந்தை ஒரு பாத்திரமாக மாற்றி அதைக் கதை சொல்ல வைத்துக் கடினமான கதையை காட்சிகளில் இனிமை சேர்த்து இலகுவாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன்.
போக்சோ சட்டம் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
மிகப்பெரும் பணபலத்தை எதிர்த்துக் களமாடும் மிகச்சாமானிய மனிதர்களின் ஒருங்கிணைவு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
நம்பகத்தன்மைக்கு மாறான காட்சிகள் இருந்தாலும் அவற்றை மக்கள் விரும்பும் மனநிலையை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன்.









