சினிமா செய்திகள்

கதைத்திருட்டு சர்ச்சையில் லவ்டுடே – அதிர்ச்சி தரும் புதியதகவல்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என பெயர் வைத்துள்ளனர்.

அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. அதில், நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோரின் காதலை அறிந்த நாயகியின் தந்தை சத்யராஜ், நீங்கள் இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்திருங்கள், அதன்பின் உங்களுக்குச் சம்மதமெனில் எனக்கும் சம்மதம் என்கிறார்.

அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்கின்றனர்.அதனால் பல குழப்பங்கள் என்பதை முன்னோட்டம் சொல்கிறது.

இதன்படி, இப்படத்தின் மையக்கரு கைபேசிகள் மாற்றிக்கொள்வது என்பதுதான்.

இந்த மையக்கரு பாவலர் அறிவுமதியின் பாடலிலிருந்து திருடப்பட்டிருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

காதலன்
கைப்பேசி
காதலி
கையில்
காதலி
கைப்பேசி
காதலன்
கையில்
ஒரு
மணி
நேரம்
மாற்றிக் கொள்ள
உடன்படும்
காதலர்
உண்டா
உண்டா
சொல்லுங்கள்

என்பது அவருடைய பாடல் என்றும் அதைத்திருடித்தான் படமெடுத்திருக்கிறார் என அவருடைய நலம்விரும்பிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தப் பாடல் வரிகளை மையமாக வைத்தே முதலில்
ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார் பிரதீப்.

இப்போது அதைத்தான்
லவ் டுடே என்ற பெயரில் முழுநீளப்படமாகவும் எடுத்திருக்கிறார் என்பதும் அவர்கள் குற்றச்சாட்டு.

திரையுலகில் பெரும்புகழ் பெற்றிருக்கும் பலர் பாவலர் அறிவுமதியின் அரவணைப்பால் உயர்ந்தவர்கள்.ஆண்தாய் என்று பலரால் அழைக்கப்படுபவர்.

அவருடைய கற்பனையை அவர் அனுமதியின்றி திருடியிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.

இதற்கு இயக்குநர் பிரதீப்பும் ஏஜிஎஸ் நிறுவனமும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

அவர்கள் பாவலரின் கற்பனைதான் இந்தப்படம் என்பதை ஒப்புக்கொண்டு மையக்கதை பாவலர் அறிவுமதி என்று போடவேண்டும் என்பது பாவலர் அறிவுமதி நலம்விரும்பிகளின கோரிக்கையாக இருக்கிறது.

மனசாட்சிப்படி இந்தக் கோரிக்கையை ஏற்பார்களா? ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் பிரதீப்பும் என்பதைப் பார்ப்போம்.

Related Posts