விமர்சனம்

பிஸ்தா – திரைப்பட விமர்சனம்

மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நடக்கும் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதையே தொழிலாகக் கொண்ட நாயகன் மெட்ரோ சிரிஷுக்கு திருமணம் செய்வதில் ஏகப்பட்ட தடைகள். காதலியும் கைவிட்டுவிட்டுப் போன நிலையில் அவருக்குத் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் பிஸ்தா. 

மெட்ரோசிரிஷ் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்கிறார். காதலி தவறாகப் புரிந்துகொண்டு கோபிக்கும்போது பதறுமிடத்தில் நடிப்புத் திறனைக் காட்டுகிறார்.இறுதியில் அவர் எடுக்கும் முடிவு இளையதலைமுறைக்கு முன்னோட்டம்.

மெட்ரோசிரிஷின் காதலியாக வருகிற மிருதுளாமுரளி, பாடல்காட்சிகளுக்குப் பயன்பட்டிருக்கிறார். 

நாயகியின் தோழியாக நடித்திருக்கும் அருந்ததிநாயர் அழகாக இருக்கிறார். இவ்வளவு அழகான தோழி எதற்கு? என்பதற்கான விடை படத்தின் கடைசியில் இருக்கிறது.

சதீஷ், யோகிபாபு, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோரைச் சிரிக்க வைப்பதற்கென நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரவரும் தங்கள் பங்கை நிறைவேற்றி உதவியிருக்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்களுக்குக் கதைக்களமே வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

தரண்குமாரின் இசையில் அழகுல இராசாத்தி, ஆத்தாடி பார்த்தேனே உள்ளிட்ட பாடல்கள் கேட்கும்விதமாக அமைந்திருக்கிறது. கதைக்களத்துக்கேற்ற பின்னணி இசையைக் கொடுத்து இயக்குநரின் எண்ணங்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார் தரண்குமார்.

எம்.விஜய்யின் ஒளிப்பதிவில் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை விரும்பும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

அஜீத் ஷாலினி, சூர்யா ஜோதிகா உட்பட திரைப்பிரபலங்களின் திருமணப் புகைப்படங்களோடு படத்தைத் தொடங்கும்போதே இது திருமணம் சம்பந்தப்பட்ட படம் என்பது தெரிகிறது. 

அதற்கேற்ப, மணமகளின் பெயர்கூட இல்லாமல் கல்யாணம் என்று சுவாரசியமாகத் தொடங்குகிறது படம்.

திருமணங்களைத் தடுத்து நிறுத்துவது என்கிற புதிய தொழிலை அறிமுகப்படுத்தி அதன்மூலம் திரைக்கதையை நகர்த்தியிருக்கும் இயக்குநர் ரமேஷ்பாரதி,  இறுதியில் ஒரு நல்லசெய்தியை விரல்நீட்டி வசனம் பேசாமல் கதைப்போக்கில் சொல்லி தலைப்புக்கும் நாயகன் மெட்ரோசிரிஷுக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

Related Posts