சினிமா செய்திகள்

இந்தியன் 2 படப்பிடிப்பு அரங்கில் தீ விபத்து – படக்குழு பதட்டம்

இந்தியன் 2 படம், 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர்.

பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி அரங்கில் இந்த விபத்து நடந்தது.

இவ்விபத்து நடந்த அடுத்த மாதமே கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் படப்பிடிப்பு மொத்தமாக நின்றது.

அதன்பின் பல்வேறு இடையூறுகளைக் கடந்து இப்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.

சென்னை, சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேபில், வேலைக்காரன் படத்துக்கு அரங்கம் அமைத்த இடத்தில் இந்தியன் 2 படத்துக்கான அரங்கம் அமைத்து அங்கு இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இங்கு அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் நேற்று முன் தினம் திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுவிட்டதாம்.

பெரிய அளவில் சேதம் எதுவுமில்லாமல் தீ அணைக்கப்பட்டுவிட்டாலும், ஏற்கெனவே ஈவிபி அரங்கில் விபத்து நடந்ததால் படக்குழு மொத்தமும் நடுங்கிப் போய்விட்டதாம்.

தொடங்கும்போதே அபசகுனமாக இருக்கிறதே என்று வேதனைப்பட்ட நேரத்தில், இது அபசகுனமல்ல திருஷ்டிக் கழிப்பு என்று சொல்லி அவர்களை ஆறுதல் படுத்தியிருக்கிறார்கள்.

அதனால், மகிழ்ச்சியாக இன்று படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார்கள்.

Related Posts