சினிமா செய்திகள்

வாத்தி பட அறிவிப்பு – தனுஷ் கண்டுகொள்ளாதது ஏன்?

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியுள்ள நானேவருவேன் படம் இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவ்வறிப்புக்குச் சற்று முன்னதாகவே தனுஷின் அடுத்த படமான வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. அப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருபடம் வெளியானபின்பு அடுத்த படம் பற்றி அறிவிக்கப்படும் வழக்கத்துக்கு மாறாக வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது ஏன்? என்கிற குழப்பம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அதோடு அந்த அறிவிப்பை தனுஷ் கண்டுகொள்ளவில்லை என்பதால் அந்தக் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

வாத்தி படக்குழுவின் அவசர அறிவிப்புக்கு என்ன காரணம்?

வாத்தி படம் தமிழகத்தில் வியாபாரம் ஆகாமல் இருக்கிறதாம். இதன் தமிழக வெளியீட்டு உரிமை சுமார் பனிரெண்டு கோடி என்று சொல்லப்பட்டதாம்.

அதனால் அப்படத்தின் தமிழக உரிமையைப் பெற முதலில் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் முயன்றாராம். ஆனால் அவர்கள் விதித்த நிபந்தனைகளால் அவர் அதைப் பெறும் முடிவில் இருந்து பின் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

அதன்பின் மதுரை அன்பு, இப்படத்தை வாங்க முன் வந்திருக்கிறார்.தமிழக உரிமை பனிரெண்டு கோடி என்று சொன்னவர்கள், அன்பு விலைக்குக் கேட்கிறார் என்றதும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி பதினெட்டு கோடி கேட்டிருக்கிறார்கள். அதனால் மதுரை அன்புவும் பின்வாங்கிவிட்டாராம்.

அதன்பின், ஆர்.கே.சுரேஷ் அப்படத்தின் உரிமையைப் பெற முயன்றாராம். அதுவும் நடக்கவில்லை.

இதனால், வெளியீட்டுத் தேதியை அறிவித்தால் வியாபாரம் நடந்துவிடும் என்று நம்பி தேதியை அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டு நிலவரம் தெரியாமல் இப்படிச் செய்துவிட்டார்கள். நானே வருவேன் வெளியாகி நன்றாக ஓடினால் இந்தப் படத்தை வாங்க முன்வருவார்கள். இல்லையென்றால் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியவில்லை அதனால் தேதியை அவசரமாக அறிவித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

இதனால்தான் தனுஷும் அந்தப்பட வெளியீட்டு அறிவிப்பைக் கண்டுகொள்ளவில்லையாம்.

Related Posts