டூ டி – திரைப்பட விமர்சனம்
உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் ஓர் இசைக்கலைஞராகவும் இருக்கிறார். எந்நேரமும் மது, மாது என்று இருக்கிறார். அவர் பற்றி நன்றாகத் தெரிந்தும் காதலிக்கிறார் ஒரு பெண். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் டூடி படம்.
இந்தப்படத்தின் கதையை எழுதியிருப்பதோடு படத்தொகுப்பாளர் சாம்.ஆர்டி எக்ஸ் உடன் இணைந்து திரைக்கதை வசனமும் எழுதியிருக்கிறார் கார்த்திக் மதுசூதன். இவற்றோடு இப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இசைக்கலைஞர்களின் உருவம், உடல்மொழி ஆகியனவற்றோடு உயர்நடுத்தரவர்க்க அலட்சியபாவத்தையும் சரியாக வெளிப்படுத்தி ஏற்றுக்கொண்ட வேடத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் கார்த்திக் மதுசூதன்.
காதல் குறித்தும் ஆண் பெண் உறவு குறித்தும் அவர் பேசும் விசயங்கள் நீண்ட விவாதங்களின் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது.
கதாநாயகியாக தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்த ஷ்ரிதா சிவதாஸ் நடித்துள்ளார். நாயகனைப் பற்றி நன்கு தெரிந்தும் அவரைக் காதலிக்கிறார். அய்யோ பாவம் என நினைத்தால் அவர்தான் நாயகனை விட அதிக அதிர்ச்சி கொடுக்கிறார்.
நாயகியின் பெற்றோராக நடித்திருக்கும் ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி ஆகியோரின் நிலை பரிதாபம். இப்படி ஒரு பெண்ணைப் பெற்றால் வேறு என்ன கிடைக்கும்?
இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன் இசையில் பாடல்கள் கேட்கலாம். கதை மாந்தர்களின் எண்ணங்களைப் பாடல்கள் பிரதிபலிக்கின்றன.
மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி.என் ஆகியோரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். காட்சிகள் உறுத்தாமல் இயல்பாக நகர வைத்திருக்கிறார்கள்.
சாம் ஆர்டி.எக்சின் படத்தொகுப்பு கச்சிதம்.
வயது கூடக்கூட எண்ணங்கள் மாறும் எனும் கருத்தைச் சொல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் மூலம் அதிரவைத்திருக்கிறார் இயக்குநர்.
சும்மாவே ஆடும் இளந்தலைமுறைக்கு இப்படம் ஓர் ஆயுதமாகப் பயன்படலாம்.











