சினிமா செய்திகள்

அமலாபால் புகார் பூவி கைது – நடந்தது என்ன?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த அமலாபால், 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

2016 ஆம் ஆண்டில் நடிகை அமலாபாலுக்கு, இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சுந்தர்ஜித்சிங்கின் மகன் பவ்நிந்தர்சிங் தத் என்கிற பூவி (வயது 36) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்த நட்பின் அடிப்படையில் பவ்நிந்தர்சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடிகை அமலாபால், திரைப்பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

அந்நிறுவனத்துக்காக 2018 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பெரியமுதலியார்சாவடி பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி அங்கு திரைப்படத் தொழில் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இதனிடையே பவ்நிந்தர்சிங் தத்தும், அமலாபாலும் இணைந்து ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்து கடாவர் என்ற திரைப்படத்தை அமலாபால் தயாரித்துள்ளார். அந்தப் படத்தில் அவரே கதாநாயகியாகவும் நடித்திருந்தார். அப்படம் சமீபத்தில் நேரடியாக இணையதளத்தில் வெளியானது.

இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க நடிகை அமலாபால் ரூ.3.75 கோடியை முதலீடு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது நடிகை அமலாபாலுக்கும், பவ்நிந்தர்சிங் தத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இதனிடையே இப்படத்தை வெளியிடக்கூடாது என பவ்நிந்தர்சிங் தத், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அமலாபாலின் விளக்கத்தைக் கேட்ட நீதிமன்றம், அப்படத்தை வெளியிட அனுமதியளித்ததன்பேரில் அந்தத் திரைப்படம் வெளியானது.

பவ்நிந்தர்சிங் தத்துடன் அமலாபால் நெருங்கிப் பழகியபோது இருவருக்கும் இராஜஸ்தானில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ஆனால் அமலாபால் தொடர்ந்து படப்பிடிப்பு உள்ளதால் தற்போதைக்குத் திருமணம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை வெளியிட வேண்டாம் எனவும் அமலாபால் கேட்டுக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பவ்நிந்தர்சிங் தத், அமலாபாலிடம் சென்று தனக்கு ரூ.6 கோடி தரவேண்டும் என்றும், இல்லையெனில் அந்தப் புகைப்படங்களை வெளியிடப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமலாபால், தனது தனி உதவியாளரான சென்னை செங்குன்றம் பாடியநல்லூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் மூலமாக விழுப்புரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்தப் புகாரில், பவ்நிந்தர்சிங் தத்தும், அவரது உறவினர்களான டெல்லியைச் சேர்ந்த ஜூல்பிகர், அனில்குமார், கரன்கனோஜலா, மித்லேஷ்குமார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வில்பேஹரா ரன்ஜித்தா, புதுச்சேரி மாநிலம் வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த பிரைன்சித்தார்த்தா இங்லே, சென்னை மேற்கு கே.கே. நகரை சேர்ந்த ஹேபாஸ்கர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த இந்திரஜித்சிங், நீலம்கரூர், கங்கதீப்கர், ஹர்பித்சிங் ஆகிய 12 பேரும் என்னை ஏமாற்றினர். அதோடு, ரூ.6 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வருகின்றனர், என்னுடைய பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து வருகின்றனர், எனக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல்கள் செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளரான பவ்நிந்தர்சிங் தத் உள்ளிட்ட 12 பேர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், அச்சுறுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றம், இணையதள குற்றம் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பவ்நிந்தர்சிங் தத்தைக் கைது செய்தனர்.

பின்னர் அவரை வானூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான அவர் கடந்த 4 வருடங்களாக பெரியமுதலியார்சாவடி பகுதியில் திரைப்பட நிறுவனம் நடத்தி வந்ததோடு ஹெர்பல் பவுடர் விற்பனையும் செய்து வந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அமலாபால் – பவ்நிந்தர் சிங் தத் நிச்சதார்த்தம் செய்து கொண்டதாகக் கூறப்படும் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவிய நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாபால் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அமலாபாலுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை இணையத்தில் பகிரக்கூடாது என்று பவ்நிந்தர் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, அமலாபாலைப் பற்றி அறிந்தோர் கூறுவதாவது, நல்ல நண்பர் பணக்காரர் என நினைத்து பவ்நிந்தர்சிங்குடன் அமலாபால் பழகியிருக்கிறார். அதன்பின் தான் அமலாபாலின் புகழை வைத்துப் பணம் சம்பாதிக்க அவர் நினைத்தது தெரியவந்துள்ளது. அதனால் அவரிடமிருந்து விலகிவிட்டார். ஆனாலும் அவர் விடாமல் இவரைத் துரத்தியுள்ளார். அதன் விளைவே காவல்துறை புகார் வரை சென்றுவிட்டது என்கிறார்கள்.

Related Posts