இளையராஜா கொடுத்த திடீர் விருந்து
விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாம். அதன்படி இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா ஜூலை 25 அன்று பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றக் கொண்ட பின் அந்த மகிழ்ச்சியை திரைப்படத்துறையினரோடு கொண்டாட முடிவு செய்தார்.
அதன்படி, திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திலுள்ள 24 சங்கங்களின் நிர்வாகிகள் சுமார் ஐநூறு பேரை அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.
சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடந்த இவ்விருந்து நிகழ்ச்சியின் போது உடனிருந்து அனைவரையும் உபசரித்த இளையராஜா, ஒவ்வொரு சங்க நிர்வாகிகளோடும் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
திடீரென அழைத்து விருந்து கொடுத்து உபசரித்த இளையராஜாவின் செயலில் திரைப்படத்தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












